
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரை வெல்லும் அணிக்கு பெனாட் - காதிர் கோப்பை வழங்கப்படவுள்ளது.
பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்றும் ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்றும் தொடங்குகின்றன. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது. முதல் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 ஆட்டம் ஆகியவை ராவல்பிண்டியிலும் கராச்சி, லாகூரில் தலா ஒரு டெஸ்டும் நடைபெறுகின்றன. 2019 ஆஷஸுக்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. இரு அணிகளும் இதுவரை 25 டெஸ்டுகளில் மோதியுள்ளன. ஆஸ்திரேலியா 13 டெஸ்டுகளிலும் பாகிஸ்தான் 7 டெஸ்டுகளிலும் வென்றுள்ளன. 1998-ல் பாகிஸ்தானுக்கு வந்த மார்க் டெய்லர் தலைமையிலான ஆஸி. அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது.
இந்நிலையில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடருக்கு பெனாட் - காதிர் கோப்பை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இரு முன்னாள் லெக் ஸ்பின்னர்களான ரிச்சி பெனாட் (ஆஸ்திரேலியா), அப்துல் காதிர் (பாகிஸ்தான்) ஆகியோரின் பங்களிப்புகளைக் கெளரவிக்கும் விதமாக இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெனாட் - காதிர் கோப்பையை இரு அணி கேப்டன்களும் இன்று அறிமுகம் செய்துவைத்தார்கள்.
ரிச்சி பெனாட், ஆஸ்திரேலிய அணிக்காக 1952 முதல் 1964 வரை 63 டெஸ்டுகளில் விளையாடி 248 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அப்துல் காதிர் பாகிஸ்தான் அணிக்காக 1977 முதல் 1993 வரை 67 டெஸ்டுகளிலும் 104 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடி டெஸ்டில் 236 விக்கெட்டுகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் 132 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.