டி20 உலகக் கோப்பை அணியிலிருந்து பிரபல மே.இ. தீவுகள் வீரர் அதிரடியாக நீக்கம்!

டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியிலிருந்து பிரபல வீரர்...
டி20 உலகக் கோப்பை அணியிலிருந்து பிரபல மே.இ. தீவுகள் வீரர் அதிரடியாக நீக்கம்!
Published on
Updated on
2 min read


டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியிலிருந்து பிரபல வீரர் ஹெட்மையர் நீக்கப்பட்டுள்ளார்.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. டி20 பிரபலங்களான ரஸ்ஸல், சுநீல் நரைன் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கையைப் போல மேற்கிந்தியத் தீவுகள் அணியும் தகுதிச்சுற்றில் விளையாடி அதில் தேர்ச்சி பெற்ற பிறகுதான் சூப்பர் 12 சுற்றில் இடம்பெற முடியும். 2012, 2016 டி20 உலகக் கோப்பைப் போட்டிகளை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2021 நவம்பர் 15 அன்று தரவரிசையின் அடிப்படையில் 10-வது இடத்தில் இருந்தது. முதல் 8 இடங்களில் இல்லாத காரணத்தால் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அணிகள் தகுதிச்சுற்றில் விளையாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் 21 வரை நடைபெறும் முதல் சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, நமிபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 8 அணிகள் போட்டியிடவுள்ளன. இந்த 8 அணிகளில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகும்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியிலிருந்து பிரபல வீரர் ஹெட்மையர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவேண்டிய விமானத்தை அவர் தவறவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஹெட்மையருக்குப் பதிலாக ஷமர் புரூக்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிபிஎல் முடிவடைந்த பிறகு மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் சனியன்று ஆஸ்திரேலியாவுக்குப் பறந்தார்கள். அக்டோபர் 1 அன்று விமானம் வழியாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவிருந்த ஹெட்மையர், தனிப்பட்ட காரணங்களால் அன்றைய தினம் செல்ல முடியவில்லை என மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்திடம் அறிவித்தார். இதையடுத்து நேற்று அவர் ஆஸ்திரேலியா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் நேற்றும் தன்னால் பயணம் செய்ய முடியவில்லை, விமானத்தைத் தவறவிட்டு விட்டதாக ஹெட்மையர் தெரிவித்தார். ஏற்கெனவே இன்னொருமுறை விமானத்தைத் தவறவிட்டால் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முடியாது என அவரிடம் மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியம் ஏற்கெனவே தகவல் தெரிவித்திருந்தது. இதன்படி ஹெட்மையர் அணியிலிருந்து நீக்கப்பட்டு புரூக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தயாராவதில் எந்தவொரு சமரசமும் இல்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஜிம்மி  ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவில் நாளை முதல் தொடங்கவுள்ள இரு ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் மே.இ. தீவுகள் அணி விளையாடுகிறது. இதன்பிறகு டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடுகிறது. அக்டோபர் 17 அன்று ஸ்காட்லாந்துக்கு எதிராக மோதவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com