இரு நாள்களுக்கு முன்பு...: ரெய்னா ஓய்வு பற்றி சிஎஸ்கே காசி விஸ்வநாதன்

சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு பற்றி சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்...
இரு நாள்களுக்கு முன்பு...: ரெய்னா ஓய்வு பற்றி சிஎஸ்கே காசி விஸ்வநாதன்
Published on
Updated on
2 min read

சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு குறித்து சிஎஸ்கே நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

2020 ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அதே நாளில் ரெய்னாவும் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். 

35 வயது ரெய்னா, 2005 முதல் 2018 வரை இந்திய அணிக்காக 18 டெஸ்டுகள், 226 ஒருநாள், 78 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் 205 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அவற்றில் பெரும்பாலான ஆட்டங்கள் சிஎஸ்கே அணிக்காக விளையாடியவை. 

இந்நிலையில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா இன்று அறிவித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் மற்றும் இந்திய உள்ளூர் போட்டிகளில் அவர் இனி விளையாட மாட்டார். எனினும் இதற்குப் பிறகு வெளிநாட்டு லீக் போட்டிகள், சாலைப் பாதுகாப்பு போட்டி போன்ற டி20 லீக் போட்டிகளில் அவரால் சுதந்திரமாகப் பங்கேற்க முடியும். 

சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு பற்றி சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தில் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக இரு நாள்களுக்கு முன்பு எங்களிடம் தெரிவித்தார் சுரேஷ் ரெய்னா. அவருடைய முடிவுக்கு நாங்கள் மரியாதை அளிக்கிறோம். அவருக்கு எங்களுடைய வாழ்த்துகள். சிஎஸ்கே அணியின் ஓர் அங்கம் அவர். பத்து வருடங்களாக சிஎஸ்கே அணிக்காக நிறைய பங்களிப்பு செய்துள்ளார். அவருடைய எதிர்காலத் திட்டங்களுக்கு எங்களுடைய வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

2008 முதல் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் விளையாடாத 2020, 2022 ஆகிய ஆண்டுகளில் மட்டும் தான் ஐபிஎல் பிளேஆஃப்-பில் பங்கேற்கவில்லை. சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் விளையாடிய 11 ஆண்டுகளிலும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது.

சிஎஸ்கே அணியில் நல்ல நடுவரிசை வீரராக நிறைய ரன்கள் எடுத்து அணிக்குப் பெரிய பலமாக இருந்துள்ளார் ரெய்னா. சிஎஸ்கே அணிக்காக விளையாடிய 11 வருடங்களில் 10 வருடங்களில் 370+ ரன்கள் எடுத்துள்ளார். கடந்த வருடம் தான் குறைந்துவிட்டது. 2021 ஐபிஎல் போட்டியில் 12 ஆட்டங்களில் விளையாடிய ரெய்னா, 160 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2008 முதல் 2014 வரை எல்லா வருடங்களிலும் குறைந்தது தலா 400 ரன்கள் எடுத்தார். எனில் எந்தளவுக்கு மகத்தான பங்களிப்பை சிஎஸ்கேவுக்கு வழங்கினார் எனப் புரிந்துகொள்ளலாம். 

2020-ல் சொந்தக் காரணங்களுக்காக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார் ரெய்னா. இதனால் பெரிய சர்ச்சை ஏற்பட்டது. அந்த வருடம் சிஎஸ்கே, பிளேஆஃப்புக்கு முதல்முறையாகத் தகுதி பெறவில்லை. கடந்த வருடம் சிஎஸ்கே அணியில் மீண்டும் இடம்பெற்றார் ரெய்னா. ஐபிஎல் கோப்பையை வென்றது சிஎஸ்கே. ரெய்னாவை இந்த வருடம் ஏலத்தில் சிஎஸ்கே எடுக்கவில்லை. மீண்டும் பிளேஆஃப்புக்கு சிஎஸ்கே தகுதி பெறவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com