செஸ் போட்டி: ஒரே நாளில் பிரக்ஞானந்தா, கார்ல்சன் தோல்வி!

புள்ளிகள் பட்டியலில் கார்ல்சன், 13 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
செஸ் போட்டி: ஒரே நாளில் பிரக்ஞானந்தா, கார்ல்சன் தோல்வி!

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அடுத்ததாக அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் (ரேபிட் முறையிலான) எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறார் இந்தியாவின் பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

முதல் சுற்றில் உலகின் நெ.1 ஜூனியர் வீரர் அலிரேஸா ஃபிரோஜாவை 2.5-1.5 என வீழ்த்தினார் பிரக்ஞானந்தா 2-வது சுற்றில் பிரபல வீரர் அனிஷ் கிரியை 2.5-1.5 என வீழ்த்தினார். 3-வது சுற்றில் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தபோதும் மீண்டு வந்து 2.5-1.5 என ஹான்ஸ் நீமன்னை வீழ்த்தினார். 4-வது சுற்றில் பிரபல வீரர் லெவோன் ஆரோனியனை  3-1 என வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. இதனால் கார்ல்சனுடன் இணைந்து முதலிடத்தில் இருந்தார்.

5-வது சுற்றில் லியம் லீயை எதிர்கொண்டார். முதல் ஆட்டம் டிரா ஆனது. அடுத்த ஆட்டத்தில் வியட்நாமின் லியம் லீ மிகத்துல்லியமாக விளையாடி பிரக்ஞானந்தாவுக்கு எவ்வித வாய்ப்பையும் வழங்காமல் வெற்றி கண்டார். இந்த ஆட்டத்தை டிரா செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தும் அதைத் தவறவிட்டார் பிரக்ஞானந்தா. அடுத்த ஆட்டத்திலும் பிரக்ஞானந்தாவை வீழ்த்திய லியம் லீ, 2.5-0.5 என 5-வது சுற்றில் வெற்றியடைந்தார். இதனால் இந்தப் போட்டியில் முதல்முறையாகத் தோல்வி கண்டுள்ளார் பிரக்ஞானந்தா.

5-வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனும் தோல்வியடைந்தார். டுடாவுக்கு எதிராக விளையாடி 2-2 என சமன் செய்தார். எனினும் பிளிட்ஸ் முறையில் நடைபெற்ற டை பிரேக்கரில் டுடா கார்ல்சனைத் தோற்கடித்து ஆச்சர்யப்படுத்தினார். இந்தச் சுற்றில் முதல் இரு ஆட்டங்களில் தோல்வி கண்ட கார்ல்சன், மீண்டு வந்து அடுத்த இரு ஆட்டங்களிலும் வெற்றியடைந்தார். எனினும் டை பிரேக்கரில் அவரால் வெற்றி பெற முடியாமல் போனது. 

புள்ளிகள் பட்டியலில் கார்ல்சன், 13 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் 2-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார். 

இன்று நடைபெறும் 6-வது சுற்றில் கார்ல்சனை வீழ்த்திய டுடாவை எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா. கார்ல்சன், அலிரேஸா ஃபிரோஜாவுடன் மோதுகிறார். நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் கார்ல்சன் - பிரக்ஞானந்தா மோதுகிறார்கள். இதனால் கடைசி இரு நாள் ஆட்டங்களும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com