இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பையில் நிச்சயமாக விளையாடுவேன் என நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் கூறியுள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்திலிருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் சமீபத்தில் விலகினார். 33 வயது டிரெண்ட் போல்ட், நியூசிலாந்து அணிக்காக 78 டெஸ்டுகள், 93 ஒருநாள், 44 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 317 விக்கெட்டுகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் 169 விக்கெட்டுகளும் டி20யில் 62 விக்கெட்டுகளும் எடுத்து நியூசிலாந்து அணியின் முக்கிய வீரராக உள்ளார். பணிச்சுமை, குடும்பத்தினருடன் கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும் போன்ற காரணங்களால் தன்னை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்திலிருந்து விலக்கிக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார் டிரெண்ட் போல்ட். இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் ஏற்றுக்கொண்டு அவரை விடுவித்துள்ளது.
2022 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக 16 ஆட்டங்களில் விளையாடினார் போல்ட். தற்போதைய முடிவால் டி20 லீக் போட்டிகளில் டிரெண்ட் போல்டின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் டிரெண்ட் போல்ட் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் தன்னுடைய எதிர்காலம் பற்றி டிரெண்ட் போல்ட் கூறியதாவது:
நிச்சயம் எனது கடைசி டெஸ்டை (இங்கிலாந்தில்) நான் விளையாடவில்லை. ஒப்பந்தத்திலிருந்து விலகியதால் நியூசிலாந்து அணிக்கு நான் தேர்வாவதில் சிக்கல் ஏற்படும் என்பதை நான் அறிவேன். இன்னும் நிறைய ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. என்னைத் தேர்ந்தெடுப்பது பற்றி நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தான் முடிவெடுக்கும். அவர்கள் முடிவை நான் ஏற்றுக்கொள்வேன்.
2019 உலகக் கோப்பை இறுதிச்சுற்று முடிந்த பிறகு கேன் வில்லியம்சனிடம் நான் சொன்னேன், அடுத்த நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் இதே இறுதிப் போட்டியில் மீண்டும் விளையாடுவோம் என்று. உலகக் கோப்பையை வெல்ல நாங்கள் மீண்டும் முயல்வோம். குடும்ப நலனை முன்வைத்துதான் ஒப்பந்தத்தில் இருந்து விலகினேன். டி20 லீக் போட்டிகளில் விளையாடும்போது என்னுடைய குடும்பத்தை அழைத்துச் செல்லலாம். தற்போதைய சூழலில் என்னுடைய மூன்று குழந்தைகளும் என்னை வருடத்துக்கு 8 வாரங்கள் மட்டுமே பார்க்கிறார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் நான் விளையாடாமல் இருந்தால் என்னால் 10 மாதங்கள் வீட்டில் இருக்க முடியும். கிரிக்கெட் முடிவுகளில் அடுத்து என்ன நடக்கும் என்று என்னால் சொல்ல முடியாது என்றார்.