டைமண்ட் லீக்: முதலிடம் பெற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்த நீரஜ் சோப்ரா
By DIN | Published On : 27th August 2022 11:35 AM | Last Updated : 27th August 2022 11:39 AM | அ+அ அ- |

ஸ்விட்சர்லாந்து டைமண்ட் லீக் போட்டியில் முதலிடம் பெற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீ. தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் 88.13 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார் நீரஜ் சோப்ரா. உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 2-வது இந்தியர் நீரஜ் சோப்ரா. 2003-ல் பாரிஸில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்றார். பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் நீரஜ் சோப்ரா காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை.
அடுத்ததாக, ஸ்விட்சர்லாந்தின் லுசானேவில் நடைபெறும் டைமண்ட் லீக் போட்டியில் பங்கேற்றார் நீரஜ் சோப்ரா. இந்தப் போட்டியில் 89.08 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பெற்றார். இந்தப் போட்டியின் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், அடுத்ததாக ஜூரிச்சில் செப்டம்பர் 7-8 தேதிகளில் நடைபெறவுள்ள டைமண்ட் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் பங்கேற்பார்கள். இதனால் டைமண்ட் லீக் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றதுடன் 2023 உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்கும் தகுதியடைந்துள்ளார் நீரஜ் சோப்ரா.