விராட் கோலி - ஷாஹீன் அப்ரிடி பேசியது என்ன?

துபையில் விராட் கோலியும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடியும் உரையாடியபோது...
விராட் கோலி - ஷாஹீன் அப்ரிடி பேசியது என்ன?

நீங்கள் மீண்டும் நன்றாக விளையாட வேண்டும் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி, விராட் கோலியிடம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர்களுடன் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் உரையாடிய காணொளியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணியினர் அனைவரும் துபைக்குச் சென்று பயிற்சியெடுத்து வருகிறார்கள். இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இடைக்காலப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் தேர்வாகியுள்ளார். 

துபையில் பயிற்சி பெறும் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் சிநேகத்துடன் உரையாடும் காணொளியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி மற்றும் ஆசியக் கோப்பைப் போட்டிகளில் மட்டுமே மோதி வருவதால் இரு அணி வீரர்களும் இதுபோன்ற போட்டிகளில் மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியின்போதும் ஆட்டம் முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் நட்பை வெளிப்படுத்தும் விதமாக நடந்துகொண்டார்கள். 

துபையில் விராட் கோலியும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடியும் உரையாடியபோது ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டார்கள். காயம் காரணமாக ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்து விலகிய ஷாஹீன் அப்ரிடியின் காயம் பற்றி கோலி நலம் விசாரித்தார். கோலி விடைபெறும் முன்பு, நீங்கள் பழையபடி நன்றாக விளையாட வேண்டும் என நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறினார் ஷாஹீன் அப்ரிடி.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com