ஆசியக் கோப்பை: பாகிஸ்தானின் திட்டங்களை மாற்றியமைத்த ஜடேஜா!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 4-ம் நிலை வீரராக ஜடேஜா களமிறங்கியதற்கு...
ஆசியக் கோப்பை: பாகிஸ்தானின் திட்டங்களை மாற்றியமைத்த ஜடேஜா!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 4-ம் நிலை வீரராக ஜடேஜா களமிறங்கியதற்கு கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

துபையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19.5 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சோ்த்தது. அடுத்து இந்தியா 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த ஆட்டத்தில் ஹாா்திக் பாண்டியா - பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டாா். ஹாா்திக் பாண்டியா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் எடுத்த புவனேஸ்வா் குமாரும், பேட்டிங்கில் 35 ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜாவும் அவருக்குத் துணையாக இருந்தனா். பாண்டியா ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்தில் ரிஷப் பந்தை அணியில் சேர்க்காமல் தினேஷ் கார்த்திக்கைத் தேர்வு செய்தார்  ரோஹித் சர்மா. இதன் காரணமாக இந்திய மேல் வரிசை பேட்டர்களில் இடக்கை பேட்டர்கள் யாரும் இல்லாததால் ஆல்ரவுண்டரான ஜடேஜா 4-ம் நிலை வீரராகக் களமிறங்கினார். அவர் நன்கு விளையாடி 29 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்துக் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்துர், ஜடேஜாவின் பேட்டிங் பற்றி கூறியதாவது:

இந்திய அணியின் இன்னிங்ஸில் இடக்கை பேட்டரைக் களமிறக்கியதுதான் முக்கியத் திருப்புமுனையாகக் கருதுகிறேன். இதனால் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸை மீண்டும் பந்துவீச அழைக்க முடியாமல் போனது. கடைசியில் தான் அவருடைய ஓவரைப் பயன்படுத்த முடிந்தது. இது பாகிஸ்தானின் தோல்விக்குக் காரணமாகிவிட்டது என்றார்.

ஜடேஜா 4-ம் நிலை வீரராகக் களமிறங்குவார் என யாரும் எண்ணவில்லை. இது சரியான முடிவு. நவாஸின் ஒரு ஓவரை பவர்பிளேயில் வீச வைத்திருக்கலாம். அப்போது இரு வலது கை பேட்டர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்று இந்திய அணியின் முடிவை ராபின் உத்தப்பாவும் பாராட்டியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com