பரபரப்பான முறையில் பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டை பரபரப்பான முறையில் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.
பரபரப்பான முறையில் பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டை பரபரப்பான முறையில் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.

முதல் டெஸ்டை வென்ற இங்கிலாந்து அணி முல்தானில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்து 51.4 ஓவர்களில் 281 ரன்கள் எடுத்தது. பென் டக்கட் 63, போப் 60 ரன்கள் எடுத்தார்கள். அறிமுக வீரர் அப்ரார் அஹமது 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 62.5 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் ஆஸம் 75, ஷகீல் 63 ரன்கள் எடுத்தார்கள். லீச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 64.5 ஓவர்களில் 275 ரன்கள் எடுத்தது. ஹாரி புரூக் 108 ரன்களும் டக்கட் 79 ரன்களும் எடுத்தார்கள். அப்ரார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் பாகிஸ்தான் அணிக்கு 355 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 3-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 64 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் இங்கிலாந்து அணி இன்றும் சிறப்பாகப் பந்துவீசி பாகிஸ்தானின் முயற்சியைத் தடுத்தது. பரபரப்பான முறையில் முடிவடைந்த டெஸ்டில் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்ஸில் 102.1 ஓவர்களில் 328 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷகீல் 94 ரன்களும் இமாம் உல் ஹக் 60 ரன்களும் எடுத்தார்கள். மார்க் வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக ஹாரி புரூக் தேர்வானார். 26 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது டெஸ்டை வென்ற இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

பாகிஸ்தானில் முதல்முறையாக அடுத்தடுத்த டெஸ்டுகளை வென்றுள்ளது இங்கிலாந்து. பாகிஸ்தான் மண்ணில் அந்த அணி பெற்ற 4-வது டெஸ்ட் வெற்றி இது. பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை வென்ற 3-வது இங்கிலாந்து கேப்டன் - பென் ஸ்டோக்ஸ். பாகிஸ்தான் அணி 1959-க்குப் பிறகு முதல்முறையாகச் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 3 டெஸ்டில் தோல்வியடைந்துள்ளது. 

3-வது டெஸ்ட், கராச்சியில் டிசம்பர் 17 அன்று தொடங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com