கடைசி டெஸ்டில் விளையாடுவாரா?: ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிரபல பாகிஸ்தான் வீரர்!

கடைசி டெஸ்டில் விளையாடுவாரா?: ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிரபல பாகிஸ்தான் வீரர்!

பாகிஸ்தான் அணிக்காக 2010 முதல் 96 டெஸ்டுகள், 53 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 7097 ரன்கள் எடுத்துள்ளார்.

பிரபல பாகிஸ்தான் பேட்டர் அசார் அலி, இங்கிலாந்துக்கு எதிரான கராச்சி டெஸ்டுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடையளிப்பதாக அறிவித்துள்ளார்.

37 வயது அசார் அலி, பாகிஸ்தான் அணிக்காக 2010 முதல் 96 டெஸ்டுகள், 53 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 7097 ரன்கள் எடுத்துள்ளார். 19 சதங்கள், 35 அரை சதங்கள். 2018-க்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் விளையாடவில்லை. 

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் நாளை நடைபெறவுள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அசார் அலி அறிவித்துள்ளார். லெக் ஸ்பின்னராக பாகிஸ்தான் அணியில் நுழைந்த அசார் அலி, பிறகு அந்த அணியின் முன்னணி பேட்டர்களில் ஒருவராக மாறி 10 வருடங்களுக்கும் மேலாக விளையாடியுள்ளார்.   

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் அணியிலிருந்து நீக்கப்பட்டதால் இந்த முடிவை அசார் அலி எடுத்துள்ளதாகத் தெரிகிறது. முதல் டெஸ்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 67 ரன்கள் மட்டுமே எடுத்தார். 3-வது டெஸ்டில் அசார் அலியை விளையாட வைப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் தெரிவித்துள்ளார். 

2019-ல் சர்ஃபராஸ் அஹமது நீக்கத்துக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக 9 டெஸ்டுகளில் பணியாற்றினார் அசார் அலி. இலங்கை, வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் இரு டெஸ்ட் தொடர்களை வென்றது பாகிஸ்தான் அணி. எனினும் அச்சமயத்தில் அசார் அலி சரியாக விளையாடாத காரணத்தால் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் ஆஸம் நியமிக்கப்பட்டார். 

தனது முடிவு குறித்து அசார் அலி கூறியதாவது: 100 டெஸ்டுகளில் விளையாட வேண்டும் என விருப்பப்பட்டேன். இந்தப் பருவத்தில் எல்லா டெஸ்டுகளிலும் விளையாடியிருந்தால் இந்த இலக்கை எட்டியிருப்பேன். இனி அது நடக்காது என்பதால் இளைஞர்களுக்கு வழி விட விரும்பினேன். இது என் சொந்த முடிவு. யாரும் என்னை வற்புறுத்தவில்லை என்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மே.இ. தீவுகள் அணிக்கு எதிராக முச்சதம் அடித்தார் அசார் அலி. பகலிரவு டெஸ்டில் முச்சதம் அடித்த ஒரே வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com