வாய்ப்புகளை நழுவவிட்ட ஃபீல்டர்கள்: வங்கதேச கேப்டன் வேதனை

இந்தியாவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் ஃபீல்டர்கள் தவறவிட்ட கேட்சுகள் குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்...
வங்கதேச வீரர்கள்
வங்கதேச வீரர்கள்

இந்தியாவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் ஃபீல்டர்கள் தவறவிட்ட கேட்சுகள் குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றுள்ளது இந்திய அணி. கடைசி டெஸ்டில் 145 ரன்கள் இலக்கை எதிர்கொள்ள இந்திய அணி மிகவும் சிரமப்பட்டபோது அஸ்வினும் ஸ்ரேயஸ் ஐயரும் திறமையாகச் சூழலைக் கையாண்டார்கள். 7 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என்கிற நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் 29, அஸ்வின் 42 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியைக் கரை சேர்த்தார்கள். ஆட்ட நாயகன் விருதை வென்றார் அஸ்வின்.

2-வது டெஸ்டில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச ஃபீல்டர்கள் நான்கு கேட்சுகளைத் தவறவிட்டார்கள். 2-வது இன்னிங்ஸில் முக்கியமான கட்டத்தில் அஸ்வின் அளித்த கேட்சை மொமினுல் ஹக் தவறவிட்டார். இதுகுறித்து வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறியதாவது:

இது சிறிது வேதனையளிக்கிறது. எங்களைப் போல மற்ற அணிகள் வாய்ப்புகளைத் தவறவிடுவதில்லை. அதுதான் வெற்றி, தோல்வியில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவை முதல் இன்னிங்ஸில் 314-க்குப் பதிலாக 250 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்திருக்கலாம். 2-வது இன்னிங்ஸிலும் வாய்ப்பு கிடைத்தது. டி20 உலகக் கோப்பை, ஒருநாள் தொடர் ஆகியவற்றில் நன்கு ஃபீல்டிங் செய்தோம். டெஸ்ட் தொடரிலும் அதேபோல செய்யமுடியவில்லை. கவனக்குறைவு அல்லது உடற்தகுதி போன்றவை காரணமாக இருக்கலாம். மற்ற அணிகள் இத்தனை வாய்ப்புகளைக் கொடுக்க மாட்டார்கள். வழக்கமான கேட்சுகளை நாங்கள் தவறவிட்டுள்ளோம். 10 விக்கெட்டுகள் எடுக்க எங்களுடைய பந்துவீச்சாளர்கள் 13, 14 வாய்ப்புகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. மற்ற அணிகள் 9 வாய்ப்புகளை உருவாக்கினாலே போதும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com