ரிஷப் பந்த் - நடிகை மோதலும் சஞ்சு சாம்சன் புறக்கணிப்பும்: இந்திய கிரிக்கெட் 2022 சர்ச்சைகள்!

சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல் போட்டியிலும் மகளிர் கிரிக்கெட்டிலும் ஏற்பட்ட சர்ச்சைகள் தான் எத்தனை எத்தனை!
ரிஷப் பந்த் - நடிகை மோதலும் சஞ்சு சாம்சன் புறக்கணிப்பும்: இந்திய கிரிக்கெட் 2022 சர்ச்சைகள்!


2022-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் ஏராளமான சர்ச்சைகள் ஏற்பட்டன. சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல் போட்டியிலும் மகளிர் கிரிக்கெட்டிலும் ஏற்பட்ட சர்ச்சைகள் தான் எத்தனை எத்தனை! வழக்கம்போல இந்த வருடமும் ஐபிஎல் போட்டியில் சர்ச்சைகள் ஏற்பட்டன. இந்திய அணியில் இந்த வருடம் ஏராளமான வீரர்களில் ஓய்வு அளிக்கப்பட்டுப் புதிய வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் பல வீரர்களுக்கு மனக்குறைகள் இருந்தன. அதனை வெளிப்படுத்தவும் அவர்கள் தவறவில்லை. 

இந்த வருட இந்திய கிரிக்கெட் சர்ச்சைகளைப் பார்ப்போம்.

ஐபிஎல்: ஏல நடத்துநர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

ஐபிஎல் ஏலத்தின்போது ஏல நடத்துநர் எட்மியட்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெற்றது. 

ஐபிஎல் ஏல நடத்துநராக எட்மியட்ஸ் பணியாற்றினார். 

ஐபிஎல் போட்டியின் ஆரம்பம் முதல் ரிச்சர்ட் மேட்லி, ஏல நடத்துநராகப் பணியாற்றினார். 2018 முதல் எட்மியட்ஸ் அப்பணியைத் தொடர்ந்து வருகிறார். 

முதல் நாள் மதியம் 2 மணி அளவில் ஏலம் நடைபெற்றபோது ஏல நடத்துநர் எட்மியட்ஸ் திடீரென மயங்கி விழுந்தார். வனிந்து ஹசரங்காவை அணிகள் தேர்வு செய்ய மும்முரமாக இருந்தபோது மேடையிலிருந்து எட்மியட்ஸ் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஐபிஎல் ஏலம் சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. எட்மியட்ஸுக்குக் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் மயங்கி விழுந்ததாகக் கூறப்பட்டது. இதன்பிறகு பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் சாரு சர்மா, ஏல நடத்துநராகப் பணியாற்றினார். 

டிஎன்பிஎல்: தமிழக வீரர் தெரிவித்த மேட்ச் ஃபிக்ஸிங் புகார்!

2021 தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபடுவதற்காகத் தனக்கு ரூ. 40 லட்சம் வழங்க முயன்றதாக பிசிசிஐ, ஐசிசியிடம் தமிழக வீரர் ராஜகோபால் சதீஷ் புகார் அளித்தார். 

2021 டிஎன்பிஎல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இடம்பெற்றிருந்தார் 41 வயது ராஜகோபால் சதீஷ். அந்த அணி டிஎன்பிஎல் கோப்பையை வென்றது. ஐபிஎல் போட்டியில் மும்பை, பஞ்சாப், கொல்கத்தா அணிகளில் விளையாடிய ராஜகோபால் சதீஷ், மேட்ச் ஃபிக்ஸிங் புகார் ஒன்றை பிசிசிஐ, ஐசிசியிடம் தெரிவித்தார். டிஎன்பிஎல் போட்டியில் ஓர் ஆட்டத்தில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபடுவதற்காகச் சமூகவலைத்தளம் வழியாகத் தனக்கு ஒருவர் ரூ. 40 லட்சம் தர முயன்றதாக அவர் புகாரளித்தார். 

இதுபற்றி பிசிசிஐ ஊழல் தடுப்பு குழுவின் தலைவர் ஷபிர் கூறியதாவது:

இந்த மாதம் எங்களிடமும் ஐசிசியிடம் மேட்ச் ஃபிக்ஸிங் குறித்த புகாரை ராஜகோபால் சதீஷ் தெரிவித்தார். சமூகவலைத்தளம் வழியாக அவருக்குப் பணம் தர முயன்றுள்ளார்கள். காவல்துறையிடம் இதுபற்றி புகார் அளிக்கக் கூறினோம். அவர் அதைச் செய்துள்ளார். இனிமேல் காவல்துறை இதுபற்றி விசாரிக்கும். அவர் இப்போது ஏன் புகார் அளித்துள்ளார் எனக் கேட்கிறீர்கள். நிலைமை எதுவாக இருந்தாலும் அதைக் காவல்துறை விசாரிப்பதே சரி. அவர் புகாரளிக்க முன்வந்தால் சரியான வழியைக் காண்பிப்பதே எங்கள் வேலை எனக் கூறினார். 

41 முதல் தர ஆட்டங்களிலும் 57 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் ராஜகோபால் சதீஷ் விளையாடியுள்ளார். 

ஆட்டமிழக்காமலேயே அஸ்வின் வெளியேறியது சரியா?: ஐபிஎல்-லில் புதிய சர்ச்சை

கிரிக்கெட்டில் ஒரு வீரர் ஆட்டமிழந்தால் மட்டுமே களத்தை விட்டு வெளியேறுவார். அல்லது காயமடைந்தால் ஆட்டத்தைத் தொடராமல் விலகுவார். 

ஐபிஎல் போட்டியிலேயே முதல்முறையாக எக்காரணமும் இல்லாமல், அடுத்த வீரர் விளையாடுவதற்காக ரிடையர்ட் ஹர்ட் முறையில் ஆட்டத்திலிருந்து விலகி புதிய புரட்சியையும் விவாதத்தையும் உருவாக்கினார் தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின்.

மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னெளவுக்கு எதிராக 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய லக்னெள அணி, 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 

இந்த ஆட்டத்தில் ஒரு விநோதமான சம்பவம் ஏற்பட்டது. ராஜஸ்தான் இன்னிங்ஸின்போது 6-ம் நிலை வீரராக 10-வது ஓவரின் கடைசியில் களமிறங்கினார் அஸ்வின். ரியான் பராக் இருக்கும்போது அஸ்வின் அவருக்கு முன்பு களமிறங்கியது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

பொறுப்புடன் விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்ட அஸ்வின், 23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு திடீரென 19-வது ஓவரில் 2 பந்துகளுக்குப் பிறகு பிறகு ஆட்டத்தை விட்டு திடீரென வெளியேறினார். அப்போது அவர் ஆட்டமிழக்கவும் இல்லை, காயம் எதுவும் ஏற்படவும் இல்லை. ரிடையர்ட் ஹர்ட் முறையில் அஸ்வின் வெளியேறியதாகக் கணக்கில் கொள்ளப்பட்டது. கடைசி ஓவரில் ரியான் பராக் அடித்தாட ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார். அஸ்வினுக்குப் பிறகு களமிறங்கிய ரியான் பராக், ஒரு சிக்ஸர் அடித்து 4 பந்துகளில் 8 ரன்கள் எடுத்துக் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

அஸ்வினின் இந்தச் செயல் கிரிக்கெட் உலகில் புதிய விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 

மைதானத்தில் ரன் எடுக்கத் தடுமாறும் ஒரு வீரர், ஆட்டமிழக்காமல், காயம் ஏற்படாமல் ஆட்டத்தை விட்டு வெளியேறலாமா?

வெளியேறலாம் என்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். அணியினர் சேர்ந்து எடுத்த முடிவு என கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டியளித்தார். 

ஐபிஎல் போட்டியில் ரிடையர்ட் ஹர்ட் முறையில் முதல்முதலாக ஆட்டமிழந்தவர் அஸ்வின்.

இதற்குச் சில எதிர்ப்புகளும் ஏற்பட்டன. இது தவறான நடைமுறை. நியாயமாகவும் இல்லை. ரன் அடிக்கத் தெரியாத வீரர், சவாலை எதிர்கொள்ளாமல் வெளியேறுவது தவறான முன்னுதாரணம் என்றும் சிலர் கருத்து தெரிவித்தார்கள். இதேபோல ஒரு பந்துவீச்சாளர் அதிக ரன்களைக் கொடுத்தால் அவரும் இதுபோல பாதி ஓவரில் வெளியேறலாமா என்கிற கேள்வியும் எழுந்தது.  

நோ பால் சர்ச்சை: கோபத்தில் டிவி ரிமோட்களை உடைத்த ரிக்கி பாண்டிங்!

ஐபிஎல் 2022 போட்டியின் 34-வது ஆட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. ராஜஸ்தான் - தில்லி அணிகள் மோதிய ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் யாரும் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. பட்லர் 65 பந்துகளில் 9 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 116 ரன்கள் எடுத்தார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் அவர் அடித்த 3-வது சதம் இது. அதற்கு முன்பு மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய அணிகளுக்கு எதிராக அவர் சதமடித்தார். இதன்பிறகு பேட்டிங் செய்த தில்லி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. ரிஷப் பந்த் 44 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. 6 பந்துகளில் 36 ரன்கள் தேவை என்கிற நிலையில் ஒபட் மெக்காய் வீசிய முதல் 3 பந்துகளிலும் சிக்ஸர் அடித்தார் ரோவ்மன் பவல். 3-வது பந்து பேட்டரின் இடுப்புக்குச் சற்று மேலே வீசப்பட்டதால் தில்லி அணி நடுவர்களிடம் நோ பால் கேட்டது. ஆனால் நடுவர்கள் நோ பால் வழங்க மறுத்துவிட்டார்கள். 3-வது நடுவரிடம் இதுகுறித்து விசாரிக்கவும் இல்லை. இதனால் கடுப்பான ரிஷப் பந்த், களத்தில் இருந்த பவல், குல்தீப் யாதவை உடனடியாக வெளியேறச் சொன்னார். பிறகு உதவிப் பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரேவை மைதானத்துக்கு உள்ளே அனுப்பினார். அவர் உள்ளே வந்து நடுவர்களிடம் விவாதம் செய்தார். ஆனால் நடுவர்கள் ஆம்ரேவை உடனடியாக அங்கிருந்து வெளியேறச் சொன்னார்கள். எல்லைக்கோட்டுக்கு அருகே இருந்த பட்லர் இதுபற்றி ரிஷப் பந்திடம் காரசாரமாக விவாதம் செய்தார். இதனால் ஆட்டத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. பிரவீன் ஆம்ரே திரும்பியவுடன் ஆட்டம் சகஜ நிலைமைக்குத் திரும்பியது. கடைசி 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டும் எடுத்துக் கடைசிப் பந்தில் 36 ரன்களுடன் ஆட்டமிழந்தார் பவல். 

ஆட்டம் முடிந்தபிறகு சமூகவலைத்தளங்களில் இச்சம்பவம் பற்றி பெரிய சர்ச்சை ஏற்பட்டது. இவ்வளவு பிரச்னைகளும் கள நடுவர்களின் பிடிவாதத்தால் தான் வந்தது. அவர்கள் 3-வது நடுவரிடம் முறையிட்டிருந்தால் பிரச்னை தீர்ந்திருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்தார்கள். ஆனால் போட்டி விதிமுறைகளின்படி ஃபுல்டாஸ் பந்தில் ஒரு பேட்டர் ஆட்டமிழந்தால் மட்டுமே கள நடுவர்களால் 3-வது நடுவரிடம் அது நோ பாலா எனக் கேட்க முடியும். இந்தச் சம்பவத்தில் பவல் ஆட்டமிழக்கமில்லை, பதிலாக சிக்ஸர் அடித்தார். இதனால் விதிமுறைகளின்படி கள நடுவர்களால் 3-வது நடுவர்களிடம் இதுகுறித்து சந்தேகம் கேட்க முடியாது. அது நோ பால் இல்லை என ஏற்கெனவே முடிவு செய்ததால் அந்த முடிவில் இறுதி வரை உறுதியாக இருந்தார்கள். 

இந்தச் சம்பவம் நடைபெற்றபோது தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மைதானத்திலேயே இல்லை. அவருடைய குடும்ப உறுப்பினர் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 நாள்கள் தனது தங்கும் விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டார். நோ பால் சர்ச்சை குறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

நாங்கள் நினைத்தது போல முந்தைய ஆட்டம் அமையவில்லை. ஆட்டத்தின் முடிவில் பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்றன. அந்த ஆட்டத்தைப் பார்த்து வெறுப்பானேன். மூன்று, நான்கு டிவி ரிமோட் கண்ட்ரோலை உடைத்தேன். சில தண்ணீர் பாட்டில்களையும் சுவற்றில் வீசி எறிந்தேன். ஒரு பயிற்சியாளராக வெளியே இருக்கும்போது மைதானத்தில் நடக்கும் எல்லாவற்றையும் உங்களால் கட்டுப்படுத்த முடியாது. அதேசமயம் நீங்கள் மைதானத்தில் இல்லாததால் அது மேலும் கடுப்பை ஏற்படுத்தும் என்றார்.

சர்ச்சையை ஏற்படுத்திய ஷ்ரேயர் ஐயரின் பேச்சு

கேகேஆர் அணியின் வீரர்கள் தேர்வில் தலைமைச் செயல் அதிகாரியும் பங்களிப்பார் என கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேசிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 

நவி மும்பையில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டத்தில் கேகேஆர் அணியில் 5 வீரர்கள் மாற்றப்பட்டிருந்தார்கள். இதுபற்றி கேகேஆர் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறியதாவது:

அணியில் பல வீரர்களை மாற்றுவது கடினமான முடிவாக இருக்கும். நானும் ஐபிஎல்-லில் விளையாட ஆரம்பிக்கும்போது அந்த இடத்தில் இருந்தேன். பயிற்சியாளர்களிடம் விவாதிப்போம். தலைமைச் செயல் அதிகாரியும் (வெங்கி மைசூர்) அணித் தேர்வில் பங்களிப்பார். பயிற்சியாளர் மெக்குல்லம், தேர்வாகாத வீரர்களிடம் சென்று நிலைமையை எடுத்துரைப்பார். அணித்தேர்வு குறித்து முடிவெடுப்பதில் அனைவரும் நன்கு ஒத்துழைக்கிறார்கள் என்றார்.

ஓர் ஆட்டத்தில் விளையாடும் வீரர்கள் பற்றி அணியின் கேப்டன், பயிற்சியாளர்கள் ஆகியோர் மட்டுமே விவாதித்து ஒரு முடிவை எடுப்பார்கள். தலைமைப் பயிற்சியாளரின் முடிவு பல அணிகளில் அணித்தேர்வை நிர்ணயம் செய்யும். மற்றபடி நிர்வாகிகள் யாரும் அணித்தேர்வில் தலையிட மாட்டார்கள். ஆனால் கேகேஆர் அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர், அணித் தேர்வில் பங்களிப்பார் என ஷ்ரேயஸ் ஐயர் பேசியது சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதனால் இப்படி நடக்கிறது, இதை ஏன் கேப்டனும் தலைமைப் பயிற்சியாளரும் அனுமதிக்கிறார்கள் எனப் பலரும் கேள்வி எழுப்பினார்கள். பிறகு விளக்கமளித்த ஷ்ரேயஸ் ஐயர், விளையாடாத வீரர்களை ஆறுதல்படுத்தவே தலைமைச் செயல் அதிகாரி முயல்வார். நான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றார். 

இரண்டரை மாத ஐபிஎல்: பாகிஸ்தான் எதிர்ப்பு

ஐபிஎல் போட்டியை 2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டுகளுக்கு தொலைக்காட்சி மற்றும் எண்ம (டிஜிட்டல்) ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ஏலத்தில் விட்டதன் மூலம் மொத்தமாக ரூ.48,390.5 கோடி வருவாய் ஈட்டவுள்ளது பிசிசிஐ. தொலைக்காட்சி ஒளிபரப்பில் டிஸ்னி ஸ்டார் நிறுவனமும் டிஜிடல் ஒளிபரப்பில் வையாகாம் நிறுவனமும் துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளுக்கான உரிமைகளைப் பெற்றன. இதனால் ஐபிஎல் போட்டியில் ஆட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளன. 

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது: அடுத்த ஐசிசி எஃப்டிபி அட்டவணையில் (2023 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு), ஐபிஎல் போட்டிக்காக இரண்டரை மாதங்கள் ஒதுக்கப்படும். இதன்மூலம் எல்லா சர்வதேச கிரிக்கெட் வீரர்களாலும் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள முடியும். ஐசிசி மற்றும் இதர கிரிக்கெட் வாரியங்களுடன் இதுபற்றி விவாதித்துள்ளோம் என்றார். 

ஐபிஎல் 2022 போட்டியில் மொத்தமாக 74 ஆட்டங்கள் நடைபெற்றன. ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008-ம் வருடம் 59 ஆட்டங்களே நடைபெற்றன. 2023, 2024 ஆகிய இரு ஆண்டுகளில் தலா 74 ஆட்டங்களை நடத்தவும் 2025, 2026 ஆண்டுகளில் தலா 84 ஆட்டங்களையும் 2027-ல் 94 ஆட்டங்களை நடத்தவும் பிசிசிஐ திட்டுமிட்டுள்ளது. 

இரண்டரை மாத ஐபிஎல் போட்டிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது. இரண்டை மாத ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களால் கலந்துகொள்ள முடியாத நிலை உள்ளது. முதல் வருடத்துக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் கலந்துகொள்வதில்லை. இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான அரசியல் காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டரை மாத ஐபிஎல் போட்டி நடைபெற்றால் அச்சமயத்தில் பாகிஸ்தான் அணியால் இதர நாடுகளுடன் விளையாட முடியாத சூழலும் ஏற்படும். இதனால் இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்திய அணியில் இடமில்லை: நள்ளிரவில் வேதனையை வெளிப்படுத்திய தெவாதியா

இந்திய டி20 அணியில் இடம்பெறாத வருத்ததை ட்விட்டரில் வெளிப்படுத்தினார் ராகுல் தெவாதியா.

ஐபிஎல் முடிந்த பிறகு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் விளையாடியது. இதன்பிறகு இந்திய அணி அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் சுற்றுப்பயணம் செய்தது. அயர்லாந்தில் ஜூன் 26, 28 தேதிகளில் இரு டி20 ஆட்டங்களை விளையாடியது. அயர்லாந்து டி20 தொடருக்கான பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டார்கள். 

ஐபிஎல் போட்டியில் பல ஆட்டங்களில் கடைசிக்கட்டங்களில் அதிரடியாக விளையாடி குஜராத் அணிக்கு வெற்றிகளைக் கொடுத்த ஆல்ரவுண்டர் ராகுல் தெவாதியாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

எதிர்பார்ப்புகள் வேதனையளிக்கின்றன என்று ஜூன் 16 நள்ளிரவு 12.53-க்கு ட்வீட் செய்தார் தெவாதியா. இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறும்விதமாக ட்வீட் செய்தார்கள். 

ஐபிஎல் 2022 போட்டியில் 16 ஆட்டங்களில் 217 ரன்கள் எடுத்தார் தெவாதியா. ஸ்டிரைக் ரேட் - 147.62. பஞ்சாப் அணிக்கு எதிராகக் கடைசி இரு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டபோது இரு சிக்ஸர்கள் அடித்து அசத்தினார் தெவாதியா. 

கோபமடைந்த பிரபல வீரர்: சர்ச்சையுடன் தொடங்கிய டிஎன்பிஎல் டி20 போட்டி 

ஜூன் மாதம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் டி20 லீக் போட்டி முதல் நாளிலேயே சர்ச்சையுடன் தொடங்கியது. 

6-வது டிஎன்பிஎல் போட்டி திருநெல்வேலியில் ஜூன் 23 அன்று தொடங்கியது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளுக்கிடையே முதல் ஆட்டம் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டம் டை ஆகி பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வென்றது. சென்னை வெற்றி பெற 185 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடைசிப் பந்தில் 5 ரன்கள் தேவை என்கிற நிலையில் எஸ்.ஹரிஷ் குமார் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை டை செய்தார். சூப்பர் ஓவரில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்தது. 0.5 ஓவரில் 10 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது நெல்லை அணி. 

தமிழக அணியின் மூத்த வீரரும் சென்னை அணியைச் சேர்ந்தவருமான ஜெகதீசனை 25 ரன்களில் பந்துவீச்சாளர் முனையில் (மன்கட் முறையில்) ரன் அவுட் செய்தார் பந்துவீச்சாளர் பாபா அபரஜித். நடுவரும் உடனடியாக முறையீட்டை ஏற்றுக்கொண்டு அவுட் கொடுத்தார். இதனை எதிர்பாராத ஜெகதீசன், கோபத்துடன் ஓய்வறைக்குத் திரும்பினார். இதனால் ஆட்டத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎல் போட்டியில் பந்துவீச்சாளர் முனையில் ரன் அவுட் செய்ததால் பலவிதமான விமர்சனங்களை எதிர்கொண்டார் தமிழக வீரர் அஸ்வின். தற்போது டிஎன்பில் போட்டியிலும் முதல்நாளிலேயே அதுபோல ஒரு சம்பவம் நடைபெற்றதால் சர்ச்சை ஏற்பட்டது.

கரோனா பாதிப்புடன் விளையாடிய கிரிக்கெட் வீராங்கனை
 

இந்தியாவுக்கு எதிரான காமன்வெல்த் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றது. 

பிர்மிங்கமில் நடைபெற்ற மகளிர் டி20 கிரிக்கெட் இறுதிச்சுற்றில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸி. அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை பெத் மூனி 61 ரன்கள் எடுத்தார். இந்திய அணி நன்கு பேட்டிங் செய்தும் கடைசிக்கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியடைந்தது. 15-வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்த இந்திய மகளிர் அணி, 19.3 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 65 ரன்களும் ஜெமிமா 33 ரன்களும் எடுத்தார்கள். கார்ட்னர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.   

இந்த ஆட்டத்தில் ஆஸி. வீராங்கனை தஹிலா மெக்ராத், கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

லேசான அறிகுறிகளுடன் இருந்த தஹிலா மெக்ராத், பரிசோதனை மேற்கொண்டதில் கரோனாவால் அவர் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இறுதிச்சுற்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு இத்தகவல் தெரிய வந்தாலும் ஆஸ்திரேலிய அணியின் 11 பேரில் ஒருவராக அவர் இடம்பெற்றார். மெக்ராத்தின் பங்கேற்புக்கு ஐசிசியும் அனுமதியளித்தது. சர்வதேச கிரிக்கெட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர் ஒருவர் ஆட்டத்தில் பங்கேற்றது இதுவே முதல்முறை. லேசான அறிகுறிகளுடன் இருந்ததால் இங்கிலாந்து நாட்டின் விதிமுறைகளின்படி மெக்ராத் விளையாட அனுமதிக்கப்பட்டார். டாஸ் நிகழ்வுக்கு முன்பு இந்திய அணியினரிடம் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் கரோனா பாதிப்புடன் மெக்ராத் விளையாடியது சமூகவலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் விளையாட்டு வீரர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு ஆளாகும்போது கரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிந்தும் அவரை அணியில் சேர்த்துக்கொண்ட ஆஸி. அணிக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். இறுதிச்சுற்றில் பேட்டிங்கில் 4-ம் நிலை வீராங்கனையாக களமிறங்கிய மெக்ராத், 2 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் 2 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்தார். 

இந்தச் சர்ச்சை பற்றி இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் கூறியதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்ட மெக்ராத் விளையாடுவது பற்றி டாஸுக்கு முன்பு எங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. காமன்வெல்த் நிர்வாகம் இந்த முடிவை எடுத்தது. எங்களுக்கும் இதில் பிரச்னை எதுவும் இல்லை. அவர் பெரிதாக உடல்நலம் பாதிக்கப்படவில்லை. எனவே இறுதிச்சுற்றில் விளையாட நாங்கள் முடிவெடுத்தோம். அத்தருணத்தில் விளையாட்டு வீரர்களுக்குரிய நட்புணர்வை வெளிப்படுத்த எண்ணினோம். மெக்ராத் விளையாடக் கூடாது என நாங்கள் சொல்லாததற்கு மகிழ்ச்சியடைகிறோம். இறுதிச்சுற்றில் விளையாடாமல் இருப்பது ஏற்க முடியாத ஒன்றாக அவருக்கு இருந்திருக்கும் என்றார். 

காமன்வெல்த் போட்டிகளின் இறுதிச்சுற்றில் விளையாடிய தஹிலா மெக்ராத், இந்திய பேட்டர் ஷெஃபாலியின் கேட்சைப் பிடித்தார். எனினும் சக வீராங்கனைகளுடன் இணைந்து அந்த மகிழ்ச்சியை பெரிதளவில் அவர் கொண்டாடவில்லை. அதேபோல எல்லைக்கோட்டுக்கு வெளியே முகக்கவசம் அணிந்து அணி வீராங்கனைகளுடன் சேராமல் தனியே அமர்ந்திருந்தார். ஆனால் ஆஸி. அணி ஆட்டத்தில் வென்ற பிறகு முகக்கவசம் அணிந்தபடி வீராங்கனைகளுடன் இணைந்து அத்தருணத்தைக் கொண்டாடி மகிழ்ந்தார்.  

சமூகவலைத்தளங்களில் தி லெஜண்ட் நடிகை - ரிஷப் பந்த் மோதல்!

பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தும் பிரபல நடிகை ஊர்வசி ரெளடேலாவும் பெயர்களைக் குறிப்பிடாமல் சமூகவலைத்தளங்களில் ஒருவர் மீது மற்றவர் குறை சொல்லி வருகிறார்கள். 

பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளடேலா, 2013 முதல் பாலிவுட்டில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான தி லெஜண்ட் என்கிற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். 

பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி ரெளடேலா முன்பு சூசகமாகத் தெரிவித்திருந்தார். இதனை மறுத்த ரிஷப் பந்த், சமூகவலைத்தளங்களில் ஊர்வசியை பிளாக் செய்தார். எனினும் இருவருக்கும் இடையிலான மோதல் இன்னும் தொடர்ந்து வருகிறது. 

சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ஊர்வசி ரெளடேலா கூறியதாவது: வாரணாசியில் எனக்குப் படப்பிடிப்பு இருந்தது. தில்லியில் ஒரு நிகழ்ச்சி இருந்தது. இரவு தான் தில்லிக்கு வந்தேன். தில்லியிலும் முழு நாளும் படப்பிடிப்பு இருந்தது. அப்போது என்னைப் பார்க்க வந்த ஆர்.பி. ஹோட்டலிலேயே காத்திருந்தார். அறைக்கு வந்து நான் தூங்கிவிட்டேன். எந்த போன் அழைப்பையும் நான் எடுக்கவில்லை. போனை எடுத்துப் பார்த்தால் 16 மிஸ்ட் கால்கள் இருந்தன. இது எனக்குக் கவலையை அளித்தது. என்னைப் பார்க்க ஒருவர் வந்து அவ்வளவு நேரம் காத்திருந்தும் என்னால் பார்க்க முடியவில்லை. நீங்கள் எப்போது மும்பை வருகிறீர்களோ அப்போது பார்க்கலாம் என அவரிடம் கூறினேன். நாங்கள் மும்பையில் சந்தித்தோம் என்றார். ஆர்பி யார் எனக் கேட்கப்பட்டதற்கு அதை நான் சொல்ல மாட்டேன் என்று கூறினார்.  

ரிஷப் பந்த் இன்ஸ்டகிராமில் ஒரு பதிவு எழுதி அதை நீக்கிவிட்டார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது:

தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பதற்காகவும் புகழுக்காகவும் மக்கள் பொய் சொல்வது வேடிக்கையாக உள்ளது. சிலர் புகழுக்காக ஏங்குவது வேதனையாக உள்ளது அவர்களைக் கடவுள் வாழ்த்தட்டும் என்று கூறி பிறகு அந்தப் பதிவை நீக்கிவிட்டார். 

இதற்குப் பிறகு இன்ஸ்டகிராமில் ஊர்வசியும் பதில் அளித்தார். சின்னத் தம்பி பேட் பந்தில் தான் விளையாட வேண்டும். உன்னைப் போன்ற சிறியவனால் நான் அவமானப்பட மாட்டேன் என்று கூறினார். 

ஒரு மாதத்துக்குப் பிறகு செப்டம்பரில் மீண்டும் ரிஷப் பந்த் - ஊர்வசி ரெளடேலா இடையிலான சர்ச்சை தொடங்கியது. ஒரு பேட்டியில் ரிஷப் பந்துக்கு ஏதாவது கூற விரும்புகிறீர்களா என ஊர்வசியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஸாரி, ஸாரி, ஸாரி என்றார். இதனால் ரிஷப் பந்தை அவமானப்படுத்தியதற்கு ஊர்வசி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையிலான விவகாரம் முடிவுக்கு வந்தது என ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் இந்த இடத்தில் மீண்டும் திருப்பத்தை ஏற்படுத்தினார் ஊர்வசி.

இன்ஸ்டகிராமில் ஊர்வசி கூறியதாவது: இப்போதெல்லாம் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விடவும் அதிகாரபூர்வ செய்திகள், மீம் பக்கங்களில் தான் அதிகமாகத் திரைக்கதைகள் எழுதப்படுகின்றன. அந்த மன்னிப்பு, என்னுடைய ரசிகர்கள், அன்பானவர்களுக்கானது என்று கூறினார். 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 12 சுற்று இறுதி ஆட்டதில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது இந்தியா. இந்த ஆட்டத்தின்போது மைதானத்தில் எல்லைக்கோட்டின் அருகே சென்று கொண்டிருந்த ரிஷப் பந்தை இந்திய ரசிகர் ஒருவர், ஊர்வசி விவகாரத்தை முன்வைத்துக் கிண்டல் செய்தார். அண்ணா ஊர்வசி கூப்டறாங்க என சத்தமாக ரிஷப் பந்த் காதில் விழும்படி கூறினார். இதற்கு உடனடியாகப் பதிலளித்த ரிஷப் பந்த், அப்ப போய் என்னன்னு கேளு என்றார். 

கிரிக்கெட் வீரரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட ரசிகருக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். மேலும் ரசிகரின் கிண்டலைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்குப் பதிலாக அதே இடத்தில் பதிலடி தந்த ரிஷப் பந்துக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். 

ரன் அவுட் சர்ச்சையில் பொய் சொல்ல வேண்டாம்: இந்திய மகளிர் அணிக்கு இங்கிலாந்து கேப்டன் அறிவுரை

அஸ்வின் போல தீப்தி சர்மாவும் எதிர்முனை ரன் அவுட் சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய மகளிர் அணி. கடைசி ஒருநாள் ஆட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. எதிர்முனையில் பந்துவீசும் முன்பு வெளியேறிய இங்கிலாந்து பேட்டர் சார்லி டீனை ரன் அவுட் செய்தார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா. நடுவர்  அவுட் எனத் தீர்ப்பு வழங்கினாலும் கிரிக்கெட்டின் மாண்பைக் குறைக்கும் செயல் எனப் பிரபல இங்கிலாந்து வீரர்களான ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், சாம் பில்லிங்ஸ் எனப் பலரும் தீப்தி சர்மாவின் நடவடிக்கையைக் குறை கூறினார்கள். இதனால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டு சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பாக விவாதங்கள் நடைபெற்றன. 

 லண்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய தீப்தி சர்மா, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சார்லி டீன் விவகாரம் பற்றி கூறியதாவது:

சார்லி டீன் பந்துவீசும் முன்பு அடிக்கடி கிரீஸை விட்டு வெளியேறுவதைக் கண்டு அவரைப் பலமுறை எச்சரித்தோம். பிறகு நடுவரிடமும் புகார் தெரிவித்தோம். அதற்குப் பிறகும் அவர் அப்படிச் செய்ததால் விதிமுறைப்படி ரன் அவுட் செய்தோம் என்று கூறினார். 

தீப்தி சர்மா அளித்த பேட்டிக்கு இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் ஹெதர் நைட் பதிலளித்தார். காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஹெதர் நைட் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக எமி ஜோன்ஸ் கேப்டனாகச் செயல்பட்டார். தீப்தி சர்மாவின் பேட்டிக்கு ஹெதர் நைட் பதிலளித்தார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ஆட்டம் முடிந்து விட்டது. முறைப்படி சார்லி டீன் ஆட்டமிழந்துள்ளார். இந்த ஆட்டத்திலும் தொடரிலும் வெல்ல தகுதியான அணி இந்தியா. ஆனால் (சார்லி டீன் விவகாரத்தில்) எச்சரிக்கை எதுவும் வழங்கப்படவில்லை. அவர்கள் அதை வழங்க வேண்டிய அவசியமும் இல்லை. அதனால் சார்லி டீனின் விக்கெட்டை முறைப்படி எடுக்கவில்லை என ஆகிவிடாது. ஆனால் ரன் அவுட் செய்தது சரியென்றால் எச்சரிக்கை குறித்து பொய் சொல்லி தங்கள் செயலை நியாயப்படுத்த வேண்டியதில்லை எனக் கூறினார்.

நான் தீப்தி சர்மா இல்லை: சர்ச்சையைக் கிளப்பிய ஸ்டார்க்கின் பேச்சு!

கிரீஸை விட்டு வெளியேறிய பேட்டரை எச்சரிக்கை செய்யும் விதமாக ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என வென்றது இங்கிலாந்து. கான்பெராவில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் பேட்டரை எச்சரிக்கை செய்யும் விதமாக ஸ்டார்க் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இங்கிலாந்து இன்னிங்ஸின்போது 5-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். அப்போது மறுமுனையில் நின்றுகொண்டிருந்த பட்லர், ஸ்டார்க் பந்துவீசியபோது கிரீஸை விட்டு வெளியேறினார். பந்துவீசி முடித்த பிறகு பட்லர் பக்கம் திரும்பிய ஸ்டார்க், நான் தீப்தி (சர்மா) இல்லை. நான் (ரன் அவுட்) செய்ய மாட்டேன். அதற்காகப் பந்துவீசும் முன்பே கிரீஸை விட்டு வெளியேறக் கூடாது என்றார். இதற்குப் பதிலளித்த பட்லர், நான் அதுபோல செய்யவில்லை என்றார். 

மறுமுனையில் உள்ள பேட்டர் பந்துவீசும் முன்பே கிரீஸை விட்டு வெளியேறினால் அவரை  ரன் அவுட் செய்யலாம் அல்லது எச்சரிக்கை கொடுக்கலாம். அதற்குப் பதிலாகத் தேவையில்லாமல் தீப்தி சர்மாவை வம்புக்கு இழுப்பது ஏன் எனப் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பினார்கள். 

ஆசியக் கோப்பை சர்ச்சை: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கை!

2023 ஆசியக் கோப்பைப் போட்டி பாகிஸ்தானில் இடம்பெறாது எனக் கருத்து தெரிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்குக் கண்டனம் தெரிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

பிசிசிஐ கூட்டத்துக்குப் பிறகு பேட்டியளித்த பிசிசிஐ செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவருமான ஜெய் ஷா, 2023 ஆசியக் கோப்பைப் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றால் இந்திய அணி அங்குச் செல்லாது. எனவே பொதுவான இடத்தில் ஆசியக் கோப்பை நடைபெறும் என்றார். ஜெய் ஷாவின் இந்தக் கருத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது. 

இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

ஆசியக் கோப்பைப் போட்டியைப் பொதுவான இடத்தில் நடத்துவது பற்றிய ஜெய் ஷாவின் கருத்துகள் ஆச்சர்யத்தையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளன. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் எவ்வித ஆலோசனையும் செய்யாமல் இக்கருத்து கூறப்பட்டுள்ளது. 1983-ல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கு எதிரானதாக இக்கருத்து உள்ளது. ஆசியப் பகுதியில் கிரிக்கெட் வளர்ச்சி பெறுவதற்காகவும் அதன் உறுப்பினர்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உருவாக்கப்பட்டது. 

ஜெய் ஷாவின் கருத்துகள் ஆசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் நாடுகளிடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவில் நடைபெறவுள்ள 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி மற்றும் வருங்காலத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்பதிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஏசிசி தலைவரிடமிருந்து இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு எங்களுக்கு வரவில்லை. எனவே இந்த விவகாரம் குறித்து விவாதிக்க உடனடியாகக் கூட்டம் நடத்த வேண்டும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் கோரிக்கை விடுக்கிறோம் என்று கூறப்பட்டது.  

ஃபேக் த்ரோ: விராட் கோலி மீது குற்றம் சாட்டிய வங்கதேச வீரர்!

ஃபீல்டிங்கில் ஏமாற்றிய விராட் கோலி மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் வங்கதேச அணி வெற்றியடைந்திருக்க வாய்ப்புண்டு என அந்த அணியைச் சேர்ந்த வீரர் நுருல் ஹாசன் பேசினார். 

வங்கதேசத்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை டி/எல் முறையில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. 

வங்கதேச இன்னிங்ஸின்போது த்ரோ வீசுவது போல ஃபேக் ஃபீல்டிங் செய்த கோலி மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கவில்லை என வங்கதேச வீரர் நுருல் ஹாசன் குற்றம் சாட்டினார். 7-வது ஓவரின்போது இச்சம்பவம் நடைபெற்றது. லிடன் தாஸ் அடித்த ஷாட்டை ஃபீல்டிங் செய்த அர்ஷ்தீப் சிங், பந்துவீச்சாளர் பக்கம் பந்தை வீசினார். அப்போது பந்து விராட் கோலியின் அருகே சென்றது. அந்தப் பந்தைப் பிடித்து வேகமாக ஸ்டம்ப் பக்கம் வீசுவது போல சைகை காண்பித்தார் கோலி. கிரிக்கெட் விதிமுறைகளின்படி ஃபேக் ஃபீல்டிங்கினால் பேட்டர்களின் கவனம் சிதறினால் அதற்கு 5 ரன்கள் அபராதம் விதிக்க வேண்டும். ஆனால் இந்தச் சம்பவத்தில் கோலியின் செயலை பேட்டர்கள் கவனித்தது போலத் தெரியவில்லை. மேலும் கோலியின் செயலால் பேட்டர்கள் ஏமாற்றப்படவுமில்லை. எனினும் ஃபேக் ஃபீல்டிங்கினால் கோலி மீது நடவடிக்கை எடுத்து 5 ரன்கள் அபராதம் விதித்திருந்தால் நாங்கள் ஜெயித்திருப்போம் என நுருல் ஹாசன் கூறினார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:

மைதானம் எந்தளவுக்கு ஈரமாக இருந்தது எனத் தெரியும். இதைப் பற்றியெல்லாம் பேசும்போது ஃபேக் த்ரோவும் இருந்தது. அதற்கு 5 ரன்கள் அபராதம் விதித்திருக்கலாம். அதுவும் எங்களுக்குச் சாதகமாக ஆகியிருக்கும். ஆனால் அதுவும் நடக்கவில்லை என்றார். 

இந்திய அணியில் நிராகரிப்பு: இன்ஸ்டகிராமில் வேதனையைப் பகிர்ந்த வீரர்கள்!
 

நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி அக்டோபர் இறுதியில் அறிவிக்கப்பட்டது.

டி20, ஒருநாள், டெஸ்ட் என நான்கு தொடர்களுக்கான அணியில் பல வீரர்கள் இடம்பெறாததால் சர்ச்சைகளும் எழுந்தன. பிருத்வி ஷா, பிஸ்னோய், ருதுராஜ் ஆகிய வீரர்களைத் தேர்வு செய்யாதது குறித்து ரசிகர்களும் நிபுணர்களும் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். இந்திய அணிக்குத் தேர்வாகாத சில வீரர்கள் இன்ஸ்டகிராமில் தங்களுடைய வருத்தத்தையும் மனநிலையையும் மறைமுகமாக வெளிப்படுத்தினார்கள்.

பிருத்வி ஷா: நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன் சாய் பாபா.

நிதிஷ் ராணா: வலி முடியவடையும். நம்பிக்கையே காத்திரு. 

பிஸ்னோய்: பின்னடைவை விடவும் மீண்டு வருவது தான் எப்போதும் வலுவானதாக இருக்கும். 

உமேஷ் யாதவ்: உங்களால் என்னை ஏமாற்ற முடியும். ஆனால் கடவுள் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறியுங்கள்

என தங்களுடைய உணர்வுகளைப் பல்வேறு விதமாக வெளிப்படுத்தினார்கள். 

ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பிருத்வி ஷா கூறியதாவது:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு என்னைத் தேர்வு செய்யாதது ஏமாற்றமாக உள்ளது. நான் நிறைய ரன்கள் எடுக்கிறேன். கடுமையாக உழைக்கிறேன். இருந்தும் எனக்கு (இந்திய அணியில்) வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பரவாயில்லை. இந்திய அணியில் விளையாட நான் தயாராக உள்ளதாகத் தேர்வுக்குழு நினைக்கும்போது என்னை விளையாட வைப்பார்கள். இந்தியா ஏ அல்லது எந்த அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் நல்ல உடற்தகுதியுடன் என் திறமையை நிரூபிப்பேன் என்றார். 

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்குக - ரசிகர்கள் கோரிக்கை

டி20 உலகக் கோப்பை, நியூசிலாந்து டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்காததால் ரசிகர்கள் கோபமடைந்து சமூகவலைத்தளங்களில் பிசிசிஐக்கு எதிராகப் பதிவுகள் எழுதினார்கள்.

இதுபற்றிய கேள்விக்கு கேப்டன் பாண்டியா பதில் கூறியதாவது:

இது என்னுடைய அணி. எந்த அணி சரியாக இருக்கும் என்பதை நானும் பயிற்சியாளரும் முடிவு செய்வோம். இன்னும் காலம் இருக்கிறது. எல்லோரும் அவரவருக்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். அப்படி வாய்ப்பு கிடைக்கும்போது அது நீண்ட பயணமாக இருக்கும். இது சிறிய தொடர் என்பதால் எல்லோருக்கும் வாய்ப்பளிப்பது கடினம். பெரிய தொடராக இருந்திருந்தால் இன்னும் அதிகமான வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கும். அணியில் அடிக்கடி வீரர்களை மாற்றுவது எனக்குப் பிடிக்காது. அணிக்கு என்ன தேவையோ அதைத்தான் செய்தேன். 6-வதாகப் பந்துவீசும் ஒருவர் தேவைப்பட்டார். தீபக் ஹூடா அதனால் தான் தேர்வானார். நான் ஒரு வீரரைத் தேர்வு செய்யாமல் போனால் அதற்குத் தனிப்பட்ட காரணங்கள் இல்லை என்பதை அறிவார்கள் என்றார்.

15-வது மாடியிலிருந்து என்னைத் தொங்கவிட்ட வீரர்: சஹால் பகிர்ந்த திகில் சம்பவம்

2013-ல் மும்பை அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடியபோது 15-வது மாடியிலிருந்து தன்னைத் தொங்க விட்ட வீரரைப் பற்றி குறிப்பிட்டார் பிரபல சுழற்பந்து வீச்சாளர் சஹால்.

2011 ஏலத்தில் சஹாலைத் தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. முதல் இரு வருடங்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2013-ல் ரோஹித் சர்மா மும்பை அணியின் கேப்டனான பிறகு ஒரு ஆட்டத்தில் சஹால் விளையாட வாய்ப்பு வழங்கினார். 2014-ல் ஆர்சிபி அணிக்கு ரூ. 10 லட்சத்துக்குத் தேர்வானார் சஹால். அதன்பிறகு 2021 வரை ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்த சஹால், 2022-ல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். 
இந்நிலையில் அஸ்வின், கருண் நாயர் ஆகிய ராஜஸ்தான் வீரர்களுடனான விடியோ உரையாடலில் தனக்கு ஏற்பட்ட ஒரு சம்பவம் குறித்துப் பேசியுள்ளார் சஹால். அவர் கூறியதாவது:

இந்தச் சம்பவம் பலருக்கும் தெரியாது. இதைப் பற்றி நான் பேசியதில்லை. 2013-ல் நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தேன். எங்களுக்கு பெங்களூரில் ஓர் ஆட்டம் இருந்தது. ஆட்டம் முடிந்த பிறகு ஒரு நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டோம். ஒரு வீரர் அப்போது மிகவும் குடித்திருந்தார். அவர் பெயரைச் சொல்ல மாட்டேன். நன்குக் குடித்திருந்த அவர், என்னைப் பார்த்துக் கூப்பிட்டார். என்னை வெளியே அழைத்துச் சென்றவர், பால்கனியிலிருந்து என்னைத் தொங்க விட்டார். அது 15-வது மாடி. என் கைகள் அவர் கழுத்தைச் சுற்றிப் பிடித்திருந்தன. திடீரென அங்குப் பலரும் வந்து, நிலைமையைக் கட்டுப்படுத்தினார்கள். எனக்கு மயக்கம் வருவது போல ஆகிவிட்டது. அவர்கள் எனக்குக் குடிக்கத் தண்ணீர் தந்தார்கள். அப்போதுதான் நான் உணர்ந்தேன், வெளியே செல்லும்போது எந்தளவுக்குப் பொறுப்புடன் இருக்கவேண்டும் என்று. நான் தப்பித்தது பெரிய விஷயம் என்று தான் இச்சம்பவத்தை நினைப்பேன். சிறிய தவறு ஏற்பட்டிருந்தாலும் நான் கீழே விழுந்திருப்பேன் என்றார். 

சஹாவை மிரட்டிய விவகாரம்: போரியாவுக்கு 2 ஆண்டு தடை விதித்த பிசிசிஐ

விக்கெட் கீப்பர் சஹாவை மிரட்டிய விவகாரத்தில் பிரபல பத்திரிகையாளர் போரியாவுக்கு 2 ஆண்டு தடை விதித்தது பிசிசிஐ.

2022 மார்ச் மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்த இலங்கை கிரிக்கெட் அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியது. விராட் கோலியின் விலகலையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். மேலும் மூத்த வீரர்களான ரஹானேவும் புஜாராவும் அணியிலிருந்து நீக்கப்பட்டார்கள். சஹா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை. 

இந்திய அணியில் தன்னைச் சேர்த்துக்கொள்ளாதது பற்றி அதிருப்தி தெரிவித்த விக்கெட் கீப்பர் சஹா, பிரபல பத்திரிகையாளர் ஒருவருக்குத் தான் பேட்டியளிக்க மறுத்ததால் தன்னை அவர் குறுந்தகவல் வழியாக மிரட்டியதாகவும் பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்தார். அந்தப் பத்திரிகையாளர் அனுப்பிய வாட்சப் தகவலையும் ட்விட்டரில் பகிர்ந்தார். 

இதையடுத்து அந்தப் பத்திரிகையாளரின் பெயரை சஹா வெளியிடவேண்டும் என்று பல கிரிக்கெட் வீரர்களும் சஹாவிடம் கோரிக்கை விடுத்தார்கள். 

இதன்பிறகு சஹாவை மிரட்டியது பிரபல பத்திரிகையாளர் போரியா மஜும்தார் என்பது தெரியவந்தது. சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதைக்கு எழுத்து வடிவம் அளித்தவர், போரியா. 

சஹாவை போரியா மிரட்டிய விவகாரம் தொடர்பாக விசாரணை செய்தது பிசிசிஐ. தான் அனுப்பிய வாட்சப் தகவல்களை இடம்மாற்றி வெளியிட்டதாக சஹா மீது குற்றம் சாட்டினார் போரியா.

இந்நிலையில் சஹாவை மிரட்டிய காரணத்துக்காகப் பத்திரிகையாளர் போரியாவுக்கு 2 ஆண்டு தடை விதித்தது பிசிசிஐ. (இந்த 2 ஆண்டுத் தடையினால், இந்தியாவில் நடைபெறும் எந்தவொரு சர்வதேச, உள்ளூர் ஆட்டங்களுக்கும் ஊடகராகச் செல்ல போரியாவுக்கு அனுமதி மறுக்கப்படும். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்களிடம் அவரால் பேட்டி எடுக்க முடியாது. பிசிசிஐயுடன் இணைந்துள்ள கிரிக்கெட் சங்கங்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிக்கெட் பகுதிகளில் போரியாவுக்கு அனுமதி மறுக்கப்படும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.