எகிறும் எதிர்பார்ப்பு: ஐபிஎல் ஏலத்துக்கான அடிப்படை விலையை உயர்த்திய ஷாருக் கான்
By DIN | Published On : 01st February 2022 05:50 PM | Last Updated : 01st February 2022 05:50 PM | அ+அ அ- |

ஷாருக் கான்
ஐபிஎல் ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் ஷாருக் கான் தனது அடிப்படை விலையை உயர்த்தியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கான மாற்று வீரர்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கானும் சாய் கிஷோரும் தேர்வாகியுள்ளார்கள்.
சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே போட்டிகளில் கடைசிக்கட்டங்களில் 26 வயது ஷாருக் கான் அதிரடியாக விளையாடியதால் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார். சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை இறுதிச்சுற்றில் கடைசி 4 ஓவர்களில் தமிழக அணி வெற்றி பெற 55 ரன்கள் தேவைப்பட்டன. அப்போதுதான் ஷாருக் கான் களமிறங்கியிருந்தார். அதனால் அணியைக் கரை சேர்க்க வேண்டிய மொத்தப் பொறுப்பும் அவரிடம் இருந்தது. கடைசி 7 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டன. பிறகு கடைசிப் பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. பரபரப்பான அந்தத் தருணத்தில் அற்புதமான சிக்ஸர் அடித்து தமிழக அணிக்கு வெற்றியை வழங்கினார் அதிரடி வீரர் ஷாருக் கான். அந்த ஆட்டத்தில் 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார்.
மாற்று வீரர்களாக இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ள ஷாருக் கானும் சாய் கிஷோரும் ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிலும் ஷாருக் கான், ஐபிஎல் போட்டியிலும் தனது திறமையை ஓரளவு நிரூபித்துள்ளார். இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
ஆரம்பத்தில் ஏலத்துக்கான அடிப்படை விலை - ரூ. 20 லட்சம் என நிர்ணயம் செய்திருந்தார் ஷாருக் கான். தற்போது இந்திய அணிக்குத் தேர்வாகியிருப்பதாலும் தன் மீதான அதிக எதிர்பார்ப்பின் காரணமாகவும் அடிப்படை விலையை ரூ. 40 லட்சமாக உயர்த்தியுள்ளார்.
2021 ஐபிஎல் ஏலத்தில் ஷாருக் கானை ரூ. 5.25 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. 11 ஆட்டங்களில் 10 சிக்ஸர்கள் உள்பட 153 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 134.21.