ஐபிஎல் ஏலப்பட்டியலில் இடம்பிடித்த விளையாட்டுத்துறை அமைச்சர்!
By DIN | Published On : 01st February 2022 04:57 PM | Last Updated : 01st February 2022 04:57 PM | அ+அ அ- |

ஐபிஎல் ஏலப்பட்டியலில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.
ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன.
ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். 10 அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ஐபிஎல் 2022 ஏலத்தில் 590 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். ஏலப் பட்டியலில் உள்ள 590 வீரர்களில் 228 சர்வதேச வீரர்களும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத 355 வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். ஏலப் பட்டியலில் 370 இந்திய வீரர்களும் 220 வெளிநாட்டு வீரர்களும் உள்ளார்கள்.
48 வீரர்களின் அடிப்படை விலை தலா ரூ. 2 கோடியாக உள்ளது. ரூ. 1.50 கோடி அடிப்படை விலையை 20 வீரர்களும் ரூ. 1 கோடி அடிப்படை விலையை 34 வீரர்களும் தேர்வு செய்துள்ளார்கள்.
ஐபிஎல் ஏலப்பட்டியலில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார். கிரிக்கெட் வீரரும் மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சருமான மனோஜ் திவாரி, அடிப்படை விலை ரூ. 50 லட்சத்துடன் ஏலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
36 வயது மனோஜ் திவாரி, இந்திய அணிக்காக 2008 முதல் 2015 வரை 12 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு சதம், ஒரு அரை சதம் அடித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் 98 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக பஞ்சாப் அணிக்காக 2018-ல் விளையாடினார்.
கடந்த வருடம் மே மாதம் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பாக ஷிப்பூர் பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஆனார். எனினும் ஐபிஎல் போட்டியிலும் இதர கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட அவர் ஆர்வமாக உள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடுவதற்காக ஏலத்தில் தன்னுடைய பெயரை அளித்தார் மனோஜ் திவாரி. தற்போது அவருடைய பெயர் ஏலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அடிப்படை விலை - ரூ. 50 லட்சம்.
ஐபிஎல் 2022 ஏலப் பட்டியலிலும் மனோஜ் திவாரியின் பெயர் இடம்பெற்றாலும் அவரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 2018-ல் ரூ. 1 கோடிக்கு பஞ்சாப் அணி தேர்வு செய்தது. கடந்த வருட ஜனவரி மாதம் பெங்கால் அணிக்காக சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் விளையாடினார். இந்த வருடம் ரஞ்சி கோப்பைப் போட்டிக்கான 21 பேர் கொண்ட பெங்கால் அணியில் மனோஜ் திவாரி இடம்பெற்றார்.