ரஹானே, புஜாரா என்ன செய்யவேண்டும்?: செளரவ் கங்குலி பதில்

நாங்கள் அனைவரும் அந்தப் போட்டியில் விளையாடியுள்ளோம். எனவே அவர்களும் விளையாடுவார்கள்.
ரஹானே
ரஹானே

ரஹானேவும் புஜாராவும் ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடி ரன்கள் எடுக்க வேண்டும் என பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரஹானேவும் புஜாராவும் பல ஆட்டங்களாக மோசமாக விளையாடி வருகிறார்கள். 2018 டிசம்பரிலும் 2019 ஜனவரியிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தடுத்த டெஸ்டுகளில் சதங்கள் அடித்தார் புஜாரா. அவ்வளவுதான். 2019 ஜனவரிக்குப் பிறகு இன்று வரை புஜாரா ஒரு சதமும் எடுக்கவில்லை. ரஹானே இதைவிடவும் மோசம். 2020 டிசம்பரில் கோலி இல்லாத இந்திய அணியை வழிநடத்தி மெல்போர்னில் சதமடித்து இந்திய அணி வெற்றி பெற உதவினார். சதமடித்த மெல்போர்ன் டெஸ்டுக்குப் பிறகு ரஹானே விளையாடிய 28 இன்னிங்ஸில் 3 அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். 

புஜாரா, ரஹானே ஆகிய இருவருக்கும் 33 வயதுதான். அதனால் இருவரும் ரஞ்சி போன்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று திறமையை மீட்டுக்கொண்டு வர வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இந்நிலையில் ரஹானே, புஜாரா பற்றி பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியதாவது:

ரஹானே, புஜாரா ஆகிய இருவரும் அருமையான வீரர்கள். இருவரும் ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடி நிறைய ரன்கள் எடுப்பார்கள் என நம்புகிறேன். நிச்சயமாக இதை அவர்கள் செய்வார்கள். அவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுவதில் எதுவும் பிரச்னை இருக்காது என நினைக்கிறேன். 

ரஞ்சி கோப்பைப் போட்டி என்பது மிகவும் பெரியது. நாங்கள் அனைவரும் அந்தப் போட்டியில் விளையாடியுள்ளோம். எனவே அவர்களும் விளையாடுவார்கள். கடந்த காலங்களில் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம்பெற்றபோது இருவரும் அதில் விளையாடியுள்ளார்கள். 

ரஞ்சி கோப்பைப் போட்டியை நடத்த நாங்கள் எப்போதும் ஆர்வமாக இருப்போம். ஒரு வருடம் தவறிவிட்டது. கடந்த இரு வருடங்களாக உலகில் நடைபெற்றதெல்லாம் வேறு எந்தக் காலத்திலும் நடந்ததில்லை என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com