நடுவரிசைக்குப் பாரம் ஏற்றிய மூவர்: 109 ஒருநாள் ஆட்டங்களில் இதுவே முதல்முறை!

ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி ஆகிய மூவரும் ஒன்றாக விளையாடிய 109 ஒருநாள் ஆட்டங்களில்...
கோலி
கோலி

ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி ஆகிய மூவரும் ஒன்றாக விளையாடிய 109 ஒருநாள் ஆட்டங்களில் முதல்முறையாக மூவருமே குறைவான ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார்கள். 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலும் வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி. 3-வது ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. ஒருநாள் தொடரை வென்ற காரணத்தால் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர், குல்தீப் யாதவ், தீபக் சஹார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். கே.எல். ராகுல், தீபக் ஹூடா, சஹால், ஷர்துல் தாக்குர் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. மே.இ. தீவுகள் அணியில் அகேல் ஹுசைனுக்குப் பதிலாக ஹேடன் வால்ஷ் இடம்பெற்றுள்ளார். பூரன் கேப்டனாக உள்ளார். 

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தின் 4-வது ஓவரை வீசிய அல்ஸாரி ஜோசப், அதே ஓவரில் ரோஹித் சர்மாவை 13 ரன்களிலும் விராட் கோலியை ரன் எதுவும் எடுக்க விடாமலும் வீழ்த்தினார். இதன்பிறகு ஷிகர் தவன், 10 ரன்களில் ஓடியன் ஸ்மித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி, 42 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி ஆகிய மூவரும் ஒன்றாக இதுவரை 109 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்கள். இதில், இப்போதுதான் முதல்முறையாக 15 ரன்களுக்குக் குறைவாக எடுத்து மூவரும் ஆட்டமிழந்துள்ளார்கள். 

2013 முதல் இந்திய அணியில் முதல் மூன்று பேட்டர்களாகப் பெரும்பாலும் ரோஹித், தவன், கோலி ஆகிய மூவருமே விளையாடி வருகிறார்கள். (மூவரில் குறைவாக ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியவர் ஷிகர் தவன். 149 ஒருநாள் ஆட்டங்கள்.) பெரும்பாலான ஆட்டங்களில் மூவரில் இருவர் நன்றாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள். சிலசமயம் இருவர் நன்றாக விளையாடாமல் போனாலும் ஒருவர் தாக்குப்பிடித்து விளையாடி, நடுவரிசைக்கு உதவியாக இருப்பார். ஆனால் இந்த 109 ஆட்டங்களில் இப்போதுதான் முதல்முறையாக மூவரும் 15 ரன்களுக்குக் குறைவாக எடுத்து நடுவரிசையின் தலையில் பெரிய பாரத்தை ஏற்றியுள்ளார்கள். அதிலும் விராட் கோலி இந்தத் தொடரில் மொத்தமாகவே 26 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பெரிய போட்டிகளுக்கு முன்பே இந்திய பேட்டர்கள் தங்கள் குறைகளைச் சரிசெய்து கொள்ள வேண்டும், மீண்டும் நன்றாக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com