ஐபிஎல் மெகா ஏலம்: முழு விவரங்கள்

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் ஏலம் பெங்களூரில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம்: முழு விவரங்கள்

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் ஏலம் பெங்களூரில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறவுள்ளது. இதுகுறித்த முழு விவரங்கள்

ஐபிஎல் மெகா ஏலம் எங்கு நடைபெறுகிறது?

பிப்ரவரி 12, 13 தேதிகளில் பெங்களூரில் உள்ள ஐடிசி கார்டனியாவில் இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு ஐபிஎல் மெகா ஏலம் தொடங்குகிறது.

இது 15-வது ஐபிஎல் ஏலம். 5-வது மெகா ஏலம். இதற்கு முன்பு 2018-ல் மெகா ஏலம் நடைபெற்றது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் ஏலம் நேரலையாக ஒளிபரப்பாகும்.

ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் விவரங்கள்

ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். 896 இந்திய வீரர்கள், 318 வெளிநாட்டு வீரர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 270 வீரர்கள், சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகாத 903 வீரர்கள், 41 அசோசியேட் வீரர்கள் பதிவு செய்தார்கள். அணிகளின் விருப்பத்தைக் கேட்டுவிட்டு ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியல் உருவாக்கப்பட்டது.

ஒவ்வொரு அணியும் 25 வீரர்களைத் தேர்வு செய்வதாக இருந்தால் ஏலத்தில் 217 வீரர்கள் பங்கேற்கவேண்டும். அதில் 70 பேர் வெளிநாட்டு வீரர்கள்.

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதிப் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. ஏலத்தில் 590 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். 44 புதிய பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அவர்களில் ஒருவர் இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சர். (ஆனால் அவரால் இந்த வருடப் போட்டியில் இடம்பெற முடியாது)

ஏலப் பட்டியலில் உள்ள 590 வீரர்களில் 229 சர்வதேச வீரர்களும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத 354 வீரர்களும் 7 அசோசியேட் வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். ஏலப் பட்டியலில் 370 இந்திய வீரர்களும் 220 வெளிநாட்டு வீரர்களும் உள்ளார்கள்.

48 வீரர்களின் அடிப்படை விலை தலா ரூ. 2 கோடியாக உள்ளது. ரூ. 1.50 கோடி அடிப்படை விலையை 20 வீரர்களும் ரூ. 1 கோடி அடிப்படை விலையை 34 வீரர்களும் தேர்வு செய்துள்ளார்கள். 

பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காத பிரபல வீரர்கள் யார் யார்?

10 அணிகளுக்கும் பிசிசிஐ அனுப்பிய வீரர்கள் பட்டியலில் பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் கெயில், மிட்செல் ஸ்டார்க், சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், ஜேமிசன், ஜை ரிச்சர்ட்சன், டேன் கிறிஸ்டியன், ஜோ ரூட், டாம் பேன்டன், மேட் ஹென்ரி போன்ற டி20 பிரபலங்கள் ஏலத்தில் தங்கள் பெயரைக் கொடுக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்துவது உள்பட பல காரணங்களுக்காக இவர்கள் 2022 ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.

ஐபிஎல் அணிகள் ஏலத்துக்கு முன்பு தக்கவைத்த வீரர்களின் விவரங்கள்

8 அணிகளும் மொத்தமாக 30 வீரர்களைத் தக்கவைத்துள்ளன.  இரு புதிய அணிகளும் தலா மூவரைத் தேர்வு செய்துள்ளன. 

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சா்மா (ரூ. 16 கோடி), பும்ரா (ரூ. 12 கோடி), சூா்யகுமாா் யாதவ் (ரூ. 8 கோடி), பொலாா்ட் (ரூ. 6 கோடி).

சென்னை சூப்பா் கிங்ஸ்: ரவீந்திர ஜடேஜா (ரூ. 16 கோடி), எம்.எஸ்.தோனி (ரூ. 12 கோடி), மொயீன் அலி (ரூ. 8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 6 கோடி).

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூா்: விராட் கோலி (ரூ. 15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (ரூ. 11 கோடி), முகமது சிராஜ் (ரூ. 7 கோடி).

பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகா்வால் (ரூ. 12 கோடி - அணியின் நிதியிலிருந்து ரூ. 14 கோடி எடுக்கப்படும்), அா்ஷ்தீப் சிங் (ரூ. 4 கோடி).

சன்ரைசா்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்சன் (ரூ. 14 கோடி), அப்துல் சமத் (ரூ. 4 கோடி), உம்ரான் மாலிக் (ரூ. 4 கோடி).

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (ரூ. 14 கோடி), பட்லா் (ரூ. 10 கோடி), ஜெய்ஸ்வால் (ரூ. 4 கோடி).

கொல்கத்தா நைட் ரைடா்ஸ்: ஆண்ட்ரே ரஸ்ஸல் (ரூ. 12 கோடி - அணியின் நிதியிலிருந்து ரூ. 16 கோடி எடுக்கப்படும்), வருண் சக்ரவா்த்தி (ரூ. 8 கோடி - அணியின் நிதியிலிருந்து ரூ. 12 கோடி எடுக்கப்படும்), வெங்கடேஷ் ஐயா் (ரூ. 8 கோடி), சுனில் நரைன் (ரூ. 6 கோடி).

தில்லி கேபிடல்ஸ்: ரிஷப் பந்த் (ரூ. 16 கோடி), பிருத்வி ஷா (ரூ. 7.5 கோடி), அக்‌ஷர் படேல் (ரூ. 9 கோடி), நோர்கியா (ரூ. 6.5 கோடி).

ஐபிஎல் அணியில் உள்ள புதிய அணியின் விவரங்களும் அந்த அணிகள் தேர்வு செய்த வீரர்களும் 

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட் அணி உரிமையாளராக இருந்தது. புதிய அணிகளுக்கு லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் எனப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

கே.எல். ராகுல்
கே.எல். ராகுல்

பழைய 8 அணிகளும் 4 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டன. ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

கே.எல். ராகுல், ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னாய் ஆகியோரை லக்னெள அணியும் ஹார்திக் பாண்டியா, ரஷித் கான், ஷுப்மன் கில் ஆகியோரை ஆமதாபாத் அணியும் தேர்வு செய்துள்ளன. லக்னெள அணியின் கேப்டனாக கே.எல். ராகுலும் ஆமதாபாத் அணி கேப்டனாக ஹார்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

லக்னெள அணி கே.எல். ராகுலுக்கு ரூ. 17 கோடி சம்பளம் வழங்குகிறது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகச் சம்பளம் பெறும் வீரர்களில் கே.எல். ராகுலும் ஒருவர். 2018-ல் விராட் கோலியை ரூ. 17 கோடிக்கு ஆர்சிபி அணி தக்கவைத்தது. லக்னெள அணி - ஸ்டாய்னிஸுக்கு ரூ. 9.20 கோடியும் பிஷ்னாய்க்கு ரூ. 4 கோடியும் சம்பளமாக வழங்குகிறது.

ஆமதாபாத் அணி - பாண்டியா, ரஷித் கானுக்குத் தலா ரூ. 15 கோடி சம்பளம் வழங்குகிறது. ஷுப்மன் கில்லுக்கு ரூ. 8 கோடி சம்பளம்.

ஐபிஎல் அணிகள் தக்கவைக்காத, தேர்வு செய்யாத பிரபல வீரர்கள்

2021 ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடம் பிடித்த டு பிளெஸ்சிஸ், பிராவோ, சுரேஷ் ரெய்னா, உத்தப்பா, தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், ஹேசில்வுட் ஆகிய முக்கிய வீரர்களை சிஎஸ்கே அணியால் தக்கவைக்க முடியவில்லை. இதே நிலை தான் இதர அணிகளுக்கும். இதில் சில வீரர்கள் ஏலத்தில் பங்குபெற விருப்பம் தெரிவித்ததாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் அணிகள் தக்கவைக்காத பிரபல வீரர்கள்:

சென்னை:  டு பிளெஸ்சிஸ், பிராவோ, சுரேஷ் ரெய்னா, உத்தப்பா, தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், ஹேசில்வுட்
கொல்கத்தா: மார்கன், ஷுப்மன் கில், ஃபெர்குசன், நிதிஷ் ராணா
பெங்களூர்: படிக்கல், சஹால், ஹர்ஷல் படேல், வாஷிங்டன் சுந்தர்
தில்லி: ஷ்ரேயஸ் ஐயர், அஸ்வின், அவேஷ் கான், ரபாடா
மும்பை: பாண்டியா, இஷான் கிஷன், டிரெண்ட் போல்ட், ராகுல் சஹார்
ஹைதராபாத்: வார்னர், ரஷித் கான், பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே
ராஜஸ்தான்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், டேவிட் மில்லர், கிறிஸ் மாரிஸ், லியம் லிவிங்ஸ்டன்
பஞ்சாப்: கே.எல். ராகுல், கிறிஸ் கெயில், ரவி பிஷ்னாய், நிகோல்ஸ் பூரன், ஷாருக் கான்

ஐபிஎல் அணிகள் தக்கவைத்த, தேர்வு செய்த புதிய வீரர்கள் யார் யார்?

இந்திய அணிக்காக விளையாடாத 4 வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஷ்தீப் சிங்
அர்ஷ்தீப் சிங்

பஞ்சாப் அணியைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த அப்துல் சமத், உம்ரான் மாலிக், ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த ஜெயிஸ்வால் ஆகியோர் தலா ரூ. 4 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். லக்னெள அணியைச் சேர்ந்த ரவி பிஷ்னாய் ரூ. 4 கோடிக்குத் தேர்வாகியுள்ளார். இந்திய அணியில் விளையாடாத வீரர்களின் சம்பளம் ரூ. 4 கோடி என பிசிசிஐ அறிவித்திருப்பதால் அந்தத் தொகை தான் அவர்களுக்குக் கிடைக்கும். 

மேலும் இந்திய அணிக்காக சில ஆட்டங்களில் விளையாடிய புதிய வீரர்களான ருதுராஜ் (சென்னை), சிராஜ் (பெங்களூர்), வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் (கொல்கத்தா) ஆகிய வீரர்களும் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் தமிழக வீரர்கள் யார் யார்?

இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் 30 தமிழக வீரர்கள் பங்கேற்கிறார்கள். தமிழக அணி இந்த வருட சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியை வென்றதோடு விஜய் ஹசாரே ஒருநாள் போட்டியில் 2-ம் இடம் பிடித்தது. இதனால் இந்த வருட ஏலத்தில் தமிழக வீரர்கள் அதிக அளவில் தேர்வாக வாய்ப்புள்ளது. ஷாருக் கான், சாய் கிஷோர் போன்ற சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத தமிழக வீரர்களைத் தேர்வு செய்ய ஐபிஎல் அணிகள் மிகவும் ஆர்வம் காண்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐபிஎல் 2022 ஏலத்தில் பங்கேற்கும் தமிழக வீரர்கள்:

ஷாருக் கான்
ஷாருக் கான்

1. ஆர். அஸ்வின் - அடிப்படை விலை  ரூ. 2 கோடி
2. வாஷிங்டன் சுந்தர் - ரூ. 1.50 கோடி
3. தினேஷ் கார்த்திக் - ரூ. 2 கோடி
4. டி. நடராஜன் - ரூ. 1 கோடி
5. ஷாருக் கான் - ரூ. 40 லட்சம்
6. சாய் கிஷோர் - ரூ. 20 லட்சம்
7. ஹரி நிஷாந்த் - ரூ. 20 லட்சம்
8. என். ஜெகதீசன் - ரூ. 20 லட்சம்
9. முருகன் அஸ்வின் - ரூ. 20 லட்சம்
10. எம். சித்தார்த் - ரூ. 20 லட்சம்
11. விஜய் சங்கர் - ரூ. 50 லட்சம்
12. ஜி. பெரியசாமி - ரூ. 20 லட்சம் 
13. சஞ்சய் யாதவ் - ரூ. 20 லட்சம்
14. சந்தீப் வாரியர் - ரூ. 20 லட்சம் 
15. சாய் சுதர்சன் - ரூ. 20 லட்சம்
16. பாபா இந்திரஜித் - ரூ. 20 லட்சம் 
17. பாபா அபரஜித் - ரூ. 20 லட்சம் 
18. அருண் கார்த்திக் - ரூ. 40 லட்சம் 
19. ஆர். சிலம்பரசன் - ரூ. 20 லட்சம் 
20. அலெக்ஸாண்டர் - ரூ. 20 லட்சம்
21. எஸ். கிஷன் குமார் - ரூ. 20 லட்சம்
22. முரளி விஜய் - ரூ. 50 லட்சம்
23. ஆர். விவேக் - ரூ. 20 லட்சம் 
24. சோனு யாதவ் - ரூ. 20 லட்சம்
25. அதிசயராஜ் - ரூ. 20 லட்சம் 
26. வி. கெளதம் - ரூ. 20 லட்சம் 
27. எம். முஹமது - ரூ. 20 லட்சம் 
28. பிரதோஷ் பால் - ரூ. 20 லட்சம்
29. ஜெ. கெளசிக் - ரூ. 20 லட்சம்
30. நிதிஷ் ராஜகோபால் - ரூ. 20 லட்சம் 

ஆரம்பத்தில் ஏலத்துக்கான அடிப்படை விலை - ரூ. 20 லட்சம் என நிர்ணயம் செய்திருந்தார் தமிழக வீரர் ஷாருக் கான். தற்போது இந்திய அணிக்குத் தேர்வாகியிருப்பதாலும் தன் மீதான அதிக எதிர்பார்ப்பின் காரணமாகவும் அடிப்படை விலையை ரூ. 40 லட்சமாக உயர்த்தியுள்ளார்.  

ஏலத்தில் ஐபிஎல் அணிகள் எத்தனை பேரைத் தேர்வு செய்யலாம்?

ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 18 பேரையும் அதிகபட்சம் 25 பேரையும் வைத்திருக்க வேண்டும். அதேபோல வீரர்களைத் தேர்வு செய்வதற்காகத் தனக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 90 கோடியிலிருந்து குறைந்தபட்சம் ரூ. 67.5 கோடியைச் செலவழித்திருக்க வேண்டும். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

ஏலத்தில் தொடக்கத்தில் இடம்பெறும் வீரர்கள் யார் யார்?

10 பிரபல வீரர்களைக் கொண்டு ஐபிஎல் ஏலம் தொடங்கும். ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் மொத்தமாக 62 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஏலம் நடைபெறும். 

10 முக்கிய வீரர்கள்: அஸ்வின், டிரெண்ட் போல்ட், பேட் கம்மின்ஸ், டி காக், ஷிகர் தவன், டு பிளெஸ்சிஸ், ஷ்ரேய்ஸ் ஐயர், ரபாடா, ஷமி, வார்னர். 

முதல் நாளன்று 161 வீரர்கள் ஏலத்தில் இடம்பெறுவார்கள். 

2-வது நாள் ஏலம் எப்படி நடைபெறும்?

முதல் நாள் ஏலம் முடிவடைந்த பிறகு, மீதமுள்ள வீரர்களில் இருந்து தங்களுக்குத் தேவையான வீரர்களின் பட்டியலை அணிகள் அளிக்க வேண்டும். அந்த வீரர்கள் 2-ம் நாள் ஏலத்தில் இடம்பெறுவார்கள். இதில் தேர்வாகாத வீரர்களையும் பிறகு அணிகள் தேர்வு செய்துகொள்ளலாம். 2018 ஏலத்தில் இருந்தது போன்ற ரைட் டு மேட்ச் கார்டு முறையில் ஒரு வீரரைத் தக்கவைக்கும் நடைமுறை இப்போது இல்லை. 

வீரர்களின் ஏலத்தொகை விவரங்கள்

அதிகபட்சமாக ரூ. 2 கோடியும் குறைந்தபட்சமாக ரூ. 20 லட்சமும் அடிப்படை ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 கோடியை 48 வீரர்கள் (17 இந்தியர்கள், 32 வெளிநாட்டு வீரர்கள்) தேர்வு செய்துள்ளார்கள். 

ஏலத்தில் பங்குபெறும் இள வயது, அதிக வயது வீரர்கள் யார் யார்?

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 17 வயது நூர் அஹமது, இளம் வீரர். பிபிஎல் உள்பட பல டி20 லீக் போட்டிகளில் நூர் விளையாடியுள்ளார். இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை. 

சிஎஸ்கே அணியில் இடம்பெற்ற 43 வயது இம்ரான் தாஹிர், அதிக வயது கொண்ட வீரராக உள்ளார். 

ஐபிஎல் ஏலத்தின் இதர அம்சங்கள்

* ஐபிஎல் போட்டி 2008-ல் தொடங்கியது. இதுவரை 14 போட்டிகள் நடைபெற்றுள்ளன. கடந்த 14 போட்டிகளிலும் விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் நான்கு வீரர்கள்தாம். 

ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில், ஷான் மார்ஷ், டுவைன் பிராவோ.

இந்த நால்வரில் டி வில்லியர்ஸ், கெயில், ஷான் மார்ஷ் ஆகிய மூவரும் இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை. ஏலப் பட்டியலிலும் அவர்களின் பெயர் இல்லை.

இதனால் 15 ஐபிஎல் போட்டிகளிலும் இடம்பெற்ற ஒரே வீரர் என்கிற பெருமையை மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த டுவைன் பிராவோ பெற்றுள்ளார். இந்தமுறை ஏலப்பட்டியலில் பிராவோவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அடிப்படை விலை - ரூ. 2 கோடி. ஐபிஎல் போட்டியில் மும்பை, குஜராத், சென்னை ஆகிய அணிகளில் பிராவோ விளையாடியுள்ளார். ஏலத்தில் சிஎஸ்கே உள்பட பல அணிகள் பிராவோவைத் தேர்வு செய்ய ஆர்வம் காண்பிக்கும் எனத் தெரிகிறது. 

மனோஜ் திவாரி
மனோஜ் திவாரி

* ஐபிஎல் ஏலப்பட்டியலில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார். கிரிக்கெட் வீரரும் மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சருமான மனோஜ் திவாரி, அடிப்படை விலை ரூ. 50 லட்சத்துடன் ஏலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 36 வயது மனோஜ் திவாரி, இந்திய அணிக்காக 2008 முதல் 2015 வரை 12 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு சதம், ஒரு அரை சதம் அடித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் 98 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக பஞ்சாப் அணிக்காக 2018-ல் விளையாடினார். கடந்த வருடம் மே மாதம் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பாக ஷிப்பூர் பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஆனார். எனினும் ஐபிஎல் போட்டியிலும் இதர கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட அவர் ஆர்வமாக உள்ளார். 

ஐபிஎல் 2022 ஏலப் பட்டியலிலும் மனோஜ் திவாரியின் பெயர் இடம்பெற்றாலும் அவரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 2018-ல் ரூ. 1 கோடிக்கு பஞ்சாப் அணி தேர்வு செய்தது. கடந்த வருட ஜனவரி மாதம் பெங்கால் அணிக்காக சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் விளையாடினார். இந்த வருடம் ரஞ்சி கோப்பைப் போட்டிக்கான 21 பேர் கொண்ட பெங்கால் அணியில் மனோஜ் திவாரி இடம்பெற்றார். 

ஆர்ச்சர்
ஆர்ச்சர்

* பிரபல வீரர் ஆர்ச்சரை  ராஜஸ்தான் அணி தக்கவைக்கவில்லை. 2-வது அறுவை சிகிச்சை காரணமாக ஐபிஎல் 2022 போட்டியில் ஆர்ச்சர் பங்குபெறுவாரா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் ஏலப்பட்டியலில் ஆர்ச்சரின் பெயர் தற்போது இடம்பெற்றுள்ளது.

ஏலப்பட்டியலில் ஆர்ச்சர் இடம்பிடித்தாலும் இந்த வருடம் விளையாட மாட்டார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகினார் ஆர்ச்சர். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகிய முக்கியமான போட்டிகளிலிருந்தும் அவர் விலகினார். டிசம்பர் 11 அன்று லண்டனில் ஆர்ச்சருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போதைய காயத்தால் ஆர்ச்சரால் 2022 ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது சந்தேகம். ஆனால் 2023, 2024 போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் எந்த அணி ஆர்ச்சரைத் தேர்வு செய்தாலும் அவர் விளையாடாவிட்டால் மாற்று வீரரைத் தேர்வு செய்யமுடியாது. ஆனால் அடுத்த இரு வருடங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக் குழப்பமான நிலையில் ஆர்ச்சரை எந்த அணி தேர்வு செய்யும் என்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யமாகவே உள்ளது.

ஆர்ச்சரைப் பெரிய தொகைக்குத் தேர்வு செய்தாலும் இந்த வருடம் அவர் விளையாட மாட்டார். அவரைத் தேர்வு செய்தால் கைவசமுள்ள பணமும் குறைந்து விடும். பிறகு நினைத்த வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்ய முடியாது. ஒருவேளை அடுத்த வருடமும் ஆர்ச்சரால் ஐபிஎல்-லில் விளையாட முடியாமல் போனால் இந்த வருடம் காத்திருந்தது வீணாகிவிடும். இந்த நிலையில் ஆர்ச்சரைத் தேர்வு செய்ய அணிகள் எந்தளவுக்குத் தயாராக இருக்கும் எனத் தெரியவில்லை. ஐபிஎல் ஏலத்தில் நமக்கு ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. 

ஐபிஎல் ஏலத்தை நடத்தப் போகிறவர் யார்?

ஆரம்பம் முதல் ரிச்சர்ட் மேட்லி, ஐபிஎல் போட்டிக்கான ஏல நடத்துநராகப் பணியாற்றினார். 2018 முதல் எட்மியட்ஸ் அப்பணியைத் தொடர்ந்து வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com