ஆஸ்திரேலியாவில் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு அனுமதி மறுப்பு
By DIN | Published On : 06th January 2022 11:46 AM | Last Updated : 06th January 2022 11:46 AM | அ+அ அ- |

ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்குபெறுவதற்காக மெல்போர்னுக்கு வந்த பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
2022 ஆஸ்திரேலிய ஓபன் போட்டி ஜனவரி 17-ல் தொடங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்க கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் கூறி வந்தார்கள்.
உலகின் நெ.1 வீரர் ஜோகோவிச்சுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் இல்லாததால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் அவரால் கலந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. இதுதொடர்பாக ஏராளமான விவாதங்கள் நடைபெற்றன.
கடந்த வருடம் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் ஜோகோவிச் வென்றார். ஆடவா் ஒற்றையரில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை 9 முறை வென்றதோடு நடப்பு சாம்பியனாகவும் உள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கலந்துகொள்வதை சில நாள்களுக்கு முன்பு ஜோகோவிச் உறுதி செய்தார். (தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என்கிற விதிமுறையிலிருந்து) விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறேன் என இன்ஸ்டகிராமில் அவர் தகவல் தெரிவித்தார். ஜோகோவிச்சுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் பலரும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதினார்கள்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்குபெறுவதற்காக மெல்போர்னுக்கு வந்த பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை ஜோகோவிச் வழங்காததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பற்றி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ட்விட்டரில் தெரிவித்ததாவது:
ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகள் அனைவருக்கும் பொதுவானது. யாரும் விதிமுறைக்கு அப்பாற்றப்பட்டவர் அல்லர். எங்களுடைய தீவிரமான எல்லைக்கட்டுப்பாட்டு விதிமுறைகளால் தான் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைக் குறைவாக உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் உள்ளது. நாங்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருப்போம் என்று கூறியுள்ளார்.