ரிஷப் பந்துக்கு என்னவிதமான அறிவுரை கூறப்படும்?: ராகுல் டிராவிட் பதில்

ரிஷப் பந்த் விளையாடிய விதம் பற்றி இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டியளித்துள்ளார்.
ரிஷப் பந்துக்கு என்னவிதமான அறிவுரை கூறப்படும்?: ராகுல் டிராவிட் பதில்

ஜொஹன்னஸ்பர்க் டெஸ்டில் ரிஷப் பந்த் விளையாடிய விதம் பற்றி இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டியளித்துள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட், கேப் டவுனில் ஜனவரி 11 அன்று தொடங்குகிறது.

ரிஷப் பந்த் 2-வது இன்னிங்ஸில் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ரபாடாவின் பந்தை முன்னேறி வந்து அடிக்க முயன்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பொறுப்பற்ற முறையில் விளையாடிய ரிஷப் பந்தைப் பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று முதல் ரிஷப் பந்த் மோசமாகவே விளையாடி வருகிறார். 13 இன்னிங்ஸில் ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். 

ரிஷப் பந்தின் ஆட்டம் பற்றி இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:

ரிஷப் பந்த் நேர்மறை எண்ணங்களுடன் விளையாடுபவர். அவருக்கென்று ஓர் ஆட்டமுறை உள்ளது. அதனால் ஓரளவு வெற்றிகளையும் பெற்றுள்ளார். கண்டிப்பாக, சில நேரங்களில் அவரிடம் இதுபற்றி விவாதிப்போம். அந்த ஷாட்டை அந்தத் தருணத்தில் விளையாடியது குறித்துப் பேசுவோம்.

அதிரடியாக விளையாட வேண்டாம் என ரிஷப் பந்திடம் யாரும் சொல்லப் போவதில்லை. அதேசமயம் எப்போது உங்கள் ஷாட்டை விளையாடுகிறீர்கள் என்பதும் முக்கியம். அப்போதுதான் ஆடுகளத்துக்கு வந்தீர்கள். உங்களுக்கென சில நேரம் கொடுத்துவிடவேண்டும் என அறிவுறுத்தலாம். அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறமை ரிஷப் பந்திடம் உள்ளது. அந்தத் திறமையை அவரிடமிருந்து எடுத்துவிடப் போவதில்லை. வேறு விதமாகவும் ஆடச் சொல்லப் போவதில்லை. எப்போது அதிரடியாக விளையாட வேண்டும் எனப் பார்க்கவேண்டும். கடினமான நேரத்தைக் கடந்துவிட்டு உங்களுக்கான ஆட்டத்தை விளையாட வேண்டும். ரிஷப் பந்த் கற்றுக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து கற்றுக்கொள்வார் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com