உலகக் கோப்பைக்குத் தேர்வாகாதது வேதனையளிக்கிறது: இந்திய வீராங்கனை பதிவு

நன்கு விளையாடியும் தொடர்ந்து என்னைப் புறக்கணிப்பது வேதனையளிக்கிறது.
உலகக் கோப்பைக்குத் தேர்வாகாதது வேதனையளிக்கிறது: இந்திய வீராங்கனை பதிவு

உலகக் கோப்பைப் போட்டிக்கு இந்திய அணியில் தேர்வாகாத பூனம் ராவத், தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார்.

நியூசிலாந்தில் மார்ச் 4 முதல்  மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. 31 நாள்களுக்கு ஆறு நகரங்களில் 31 ஆட்டங்கள் நடைபெற்றவுள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் என 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. 8 அணிகளும் இதர அணிகளுடன் ஒரு முறை மோதும் விதத்தில் லீக் ஆட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஏப்ரல் 3 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிதாலி ராஜ் தலைமையிலான அணியில் பிரபல வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிகஸ், ஷிகா பாண்டே, பூனம் ராவத் போன்ற வீராங்கனைகள் இடம்பெறவில்லை. மேக்னா சிங், ரேணுகா சிங், யாஷ்திகா பாட்டியா ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 ஒருநாள், ஒரு டி20 ஆட்டத்திலும் பங்கேற்கிறது. பிப்ரவரி 9 முதல் 24 வரை இத்தொடர்கள் நடைபெறுகின்றன. 

இந்நிலையில் இந்திய அணிக்குத் தேர்வாகாத பூனம் ராவத் தனது வேதனையை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கடந்த வருடம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் பூனம் ராவத் இடம்பெற்றிருந்தார். கடந்தமுறை நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியிலும் இந்திய அணியில் அவர் விளையாடினார். 32 வயது பூனம் ராவத், இந்திய அணிக்காக 2009 முதல் 4 டெஸ்டுகள், 73 ஒருநாள், 35 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

ட்விட்டரில் பூனம் ராவத் கூறியதாவது:

மூத்த பேட்டராகவும் இந்திய அணிக்காகத் தொடர்ந்து ரன்கள் குவிப்பராகவும் உள்ள நான், உலகக் கோப்பை அணியில் தேர்வாகாததில் மிகுந்த வேதனையடைந்துள்ளேன். 2021-ல் 73.75 ரன்கள் சராசரி வைத்துள்ளேன். நான் விளையாடிய ஆறு ஒருநாள் ஆட்டங்களில் ஒரு சதம் இரு அரை சதங்களுடன் 295 ரன்கள் எடுத்துள்ளேன். நன்கு விளையாடியும் தொடர்ந்து என்னைப் புறக்கணிப்பது வேதனையளிக்கிறது. இந்திய அணிக்காக விளையாடும் வீராங்கனைகளுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்திய அணி

மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்ப்ரீத் கெளர் (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஷ்திகா பாட்டியா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஸ்நேக் ராணா, ஜுலான் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா சிங், தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராஜேஷ்வரி கயாக்வாட், பூணம் யாதவ்.

மாற்று வீராங்கனைகள்: சபினேனி மேக்னா, ஏக்தா பிஸ்த், சிம்ரன் தில் பகதூர்.

இந்திய அணியின் உலகக் கோப்பை ஆட்டங்கள்

vs பாகிஸ்தான், மார்ச் 6
vs நியூசிலாந்து, மார்ச் 10
vs மே.இ. தீவுகள், மார்ச் 12
vs இங்கிலாந்து, மார்ச் 16
vs ஆஸ்திரேலியா, மார்ச் 19
vs வங்கதேசம், மார்ச் 22
vs தென்னாப்பிரிக்கா, மார்ச் 27

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com