5-வது ஆஷஸ் டெஸ்டில் விளையாடும் கவாஜா: மார்கஸ் ஹாரிஸ் நீக்கம்

5-வது ஆஷஸ் டெஸ்டில் விளையாடும் கவாஜா: மார்கஸ் ஹாரிஸ் நீக்கம்

இரு சதங்கள் அடித்த கவாஜா, 5-வது ஆஷஸ் டெஸ்டில் விளையாடுவார் என ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
Published on

இரு சதங்கள் அடித்த கவாஜா, 5-வது ஆஷஸ் டெஸ்டில் விளையாடுவார் என ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதுவரை நான்கு டெஸ்டுகள் முடிந்துள்ளன. ஆஸ்திரேலியா 3-0 என முன்னிலையில் உள்ளது. 4-வது டெஸ்ட் டிரா ஆனது. 5-வது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக ஹோபர்டில் நாளை தொடங்குகிறது.

ஆஷஸ் தொடரின் முதல் மூன்று டெஸ்டுகளில் விளையாடாமல் 4-வது டெஸ்டில் விளையாடிய ஆஸி. வீரர் கவஜா இரு சதங்களை எடுத்தார். 2019 ஆஷஸ் தொடருக்குப் பிறகு ஆஸி. அணியில் மீண்டும் இடம்பிடித்த 35 வயது கவாஜா, தன்னுடைய 45-வது டெஸ்டில் 9-வது மற்றும் 10-வது சதங்களை எடுத்தார். ஆஷஸ் தொடரில் நான்கு வருடங்களுக்குப் பிறகு அவர் சதமடித்தார். டிராவிஸ் ஹெட்டுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஆஸி. அணியில் இடம்பிடித்த கவாஜா, இந்தச் சதங்களால் தனக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கவேண்டிய நெருக்கடியை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில்  4-வது டெஸ்டில் இரு சதங்களால் அசத்திய கவாஜா, 5-வது டெஸ்டிலும் இடம்பெறுவார் என ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் மார்கஸ் ஹாரிஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். டிராவிஸ் ஹெட்டும் ஹோபர்ட் டெஸ்டில் விளையாடவுள்ளார். இதுபற்றி கம்மின்ஸ் மேலும் கூறியதாவது:

இந்த முடிவு மார்கஸ் ஹாரிஸுக்குக் கடினமாகவே இருக்கும். ஒரே ஆட்டத்தில் ஒருவர் இரு சதங்கள் அடிப்பது எப்போது நடக்காது. மெல்போர்ன் டெஸ்டில் நாங்கள் வெற்றி பெற மார்கஸ் ஹாரிஸின் இன்னிங்ஸ் மிகவும் உதவியது. எங்களுடைய வருங்காலத் திட்டத்தில் மார்கஸ் ஹாரிஸ் நிச்சயம் உள்ளார். அவருக்கான வாய்ப்புகள் வழங்கப்படும். கவாஜாவால் பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் விளையாட முடியும். தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும் கவாஜாவும் விளையாடுவார்கள் என்றார். 

ஆஷஸ் தொடரில் நான்கு டெஸ்டுகளில் விளையாடியுள்ள 29 வயது மார்கஸ் ஹாரிஸ், மெல்போர்னில் மட்டுமே அரை சதம் எடுத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com