ஆஸ்திரேலியா நெ.1 டெஸ்ட் அணியா?

கடந்த ஆறு வருடங்களாக வெளிநாட்டில் ஒரு டெஸ்ட் தொடரும் ஜெயிக்காத ஓர் அணியை எப்படி நெ.1 என ஒப்புக்கொள்ள முடியும்...
ஆஸ்திரேலியா நெ.1 டெஸ்ட் அணியா?

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நெ.1 அணியாக முன்னேற்றம் அடைந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

ஆஷஸ் தொடரை 4-0 என வென்றதால் கிடைத்த பலன் இது. புதிய கேப்டன் பேட் கம்மின்ஸுக்கு ஆரம்பமே அசத்தலாக அமைந்துள்ளது.

தரவரிசையில் இந்தியா, நியூசிலாந்து அணிகளைப் பின்னுக்குத் தள்ளி நெ.1 இடத்துக்கு முன்னேறியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 

நெ.1 டெஸ்ட் அணியாக இருந்த இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததாலும் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை வென்றதாலும் தரவரிசையில் 3-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது. நியூசிலாந்து அணி 2-ம் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. 

இந்நிலையில் நெ.1 டெஸ்ட் அணியாக ஆஸ்திரேலியா அறிவிக்கப்பட்டதற்குப் பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள்.

2019-ல் கடைசியாக வெளிநாட்டுக்குச் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது ஆஸ்திரேலியா. இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை 2-2 என சமன் செய்தது. 

அதன்பிறகு பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடர்களில் விளையாடின. இதில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் ஒரு டெஸ்டிலும் தோற்காமல் வெற்றிகளை அள்ளியது ஆஸ்திரேலிய அணி. பாகிஸ்தானுக்கு எதிராக 2-0, நியூசிலாந்துக்கு எதிராக 3-0, இங்கிலாந்துக்கு எதிராக 4-0 எனத் தொடர்களை வென்ற ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிராக 1-2 எனத் தோற்றது.

கடந்த வருடம் மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று மூன்று டெஸ்டுகளில் விளையாடவிருந்தது ஆஸ்திரேலியா. ஆனால், தெ.ஆ.வில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தது. அதேபோல 2020 ஜூன் மாதம் வங்கதேசத்துக்குச் சென்று இரு டெஸ்டுகளில் விளையாடவிருந்தது ஆஸ்திரேலியா. அந்தச் சுற்றுப்பயணமும் கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் 2019க்குப் பிறகு வெளிநாட்டில் எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் ஆஸ்திரேலியா பங்கேற்கவில்லை. 

மேலும் 2016 பிப்ரவரியில் நியூசிலாந்துக்குச் சென்று இரு டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது ஆஸ்திரேலியா. அதன்பிறகு அந்த அணி வெளிநாட்டில் எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் ஜெயிக்கவில்லை. அதாவது கடந்த ஆறு வருடங்களாக வெளிநாட்டில் ஒரு டெஸ்ட் தொடரும் ஜெயிக்காத ஓர் அணியை எப்படி நெ.1 என ஒப்புக்கொள்ள முடியும் எனப் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். 

உள்ளூரில் மட்டும் விளையாடி, உள்ளூரில் மட்டும் ஜெயித்த ஓர் அணியை நெ.1 டெஸ்ட் அணி எனக் கூறுவது நகைச்சுவையாக உள்ளது எனப் பலரும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையை விமர்சனம் செய்துள்ளார்கள். 

டெஸ்ட் தரவரிசை

1. ஆஸ்திரேலியா
2. நியூசிலாந்து
3. இந்தியா
4. இங்கிலாந்து
5. தென்னாப்பிரிக்கா
6. பாகிஸ்தான்
7. இலங்கை
8. மேற்கிந்தியத் தீவுகள்
9. வங்கதேசம்
10. ஜிம்பாப்வே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com