குஜராத்தில் நடந்த போலி ஐபிஎல்: யூடியூப் வழியாக ஏமாற்றியது எப்படி?

இந்தச் செய்தியைப் படிக்கும் உங்களுக்கு இப்படியெல்லாம் கூட நடக்குமா என்கிற ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஏற்படும்.
குஜராத்தில் நடந்த போலி ஐபிஎல்: யூடியூப் வழியாக ஏமாற்றியது எப்படி?

குஜராத்தில் போலியான முறையில் ஐபிஎல் போட்டியை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளார்.

இந்தச் செய்தியைப் படிக்கும் உங்களுக்கு இப்படியெல்லாம் கூட நடக்குமா என்கிற ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஏற்படும்.

பிசிசிஐ வருடந்தோறும் இரு மாதங்களுக்கு நடத்தும் ஐபிஎல் போட்டி எந்தளவுக்குப் புகழ் பெற்றது, அதிலிருந்து பிசிசிஐக்கு எத்தனை கோடி வருமானம்  கிடைக்கிறது என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியை பாண்டியா தலைமையிலான குஜராத் அணி வென்றது.

இப்படி ஊர் உலகம் அறிந்த ஐபிஎல் போட்டியை போலியாக செட் அப் செய்து ஏமாற்ற முடியுமா? அதை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட முடியுமா? சாத்தியமா?

முடியும் என குஜராத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

குஜராத்தைச் சேர்ந்த சோயப் தாவ்டா என்கிறவர், ரஷியாவில் உள்ள பப்பில் பணிபுரிந்தபோது ரஷியர்கள் எப்படியெல்லாம் சூதாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதை அறியும் வாய்ப்பு கிடைத்தது. பப்பில் பணியாற்றியபோது ஆசிப் முகமது என்கிறவரைச் சந்தித்தார் சோயப். அவர் சூதாட்டத்தில் தீவிரமாக ஈடுபடுபவர். அவர் தான் சோயப் தாவ்டாவிடம் இந்தப் போலி ஐபிஎல் திட்டத்தைப் பற்றி கூறியுள்ளார். சோயப்புக்குச் சூதாட்டக்காரர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார். 

ஊரில் ஒரு பண்ணையை வாடகைக்கு எடுப்போம். அதில் கிரிக்கெட் ஆட்டங்களை ஏற்பாடு செய்வோம். யூடியூப் வழியாக போலி ஐபிஎல் போட்டியை ஒளிபரப்புவோம். ரஷியாவில் உள்ள சூதாட்டக்காரர்களை ஏமாற்றுவோம். பணத்தை அள்ளுவோம். இதுதான் திட்டம். 

யோசனையெல்லாம் சரிதான். இது எப்படிச் சாத்தியமானது? எப்படிப் பிடிபட்டார்கள்?

ஊருக்கு வந்து போட்டி அமைப்பாளர்களாக மூன்று பேரைத் துணைக்கு வைத்துக் கொண்டார் சோயப். அதில் ஒருவர் நடுவராக நடித்துள்ளார். மீரட்டிலிருந்து ஹர்ஷா போக்ளே போல பேசுபவர் வர்ணனையாளராகப் பணியாற்றினார். ஒரு பண்ணையை வாடகைக்கு எடுத்தார்கள். ஒரு மாதத்துக்கு ரூ. 7000 என்று சொன்னவுடன் அதுவும் கிடைத்துவிட்டது. 

குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மொலிபூர் கிராமத்தைச் சேர்ந்த 21 தொழிலாளர்கள் இவர்கள் வலையில் விழுந்தார்கள். விவசாயிகள், வேலையில்லாத 21 பேரைக் கொண்டு ஐபிஎல் அணிகள் உருவாகின. தொடங்கியது போலி ஐபிஎல் போட்டி.

ஐபிஎல் போட்டியில் உள்ளது போன்று சென்னை, மும்பை, குஜராத் என அணிகள் பிரிக்கப்பட்டு அந்த அணிகளின் சீருடையில் வீரர்கள் விளையாட வைக்கப்பட்டார்கள். அதாவது ரஷிய சூதாட்டக்காரர்களுக்கு இதுதான் ஐபிஎல் போட்டி, இவர்கள் தான் ஐபிஎல் வீரர்கள் எனச் சொல்லப்பட்டது. போட்டியை யூடியூபில் நேரலையாகவும் ஒளிபரப்பினார்கள். 

நிஜ ஐபிஎல் போட்டி முடிந்த மூன்றாவது வாரத்தில் போலி ஐபிஎல் போட்டி தொடங்கியிருக்கிறது. போட்டி காலிறுதி வரை சென்ற பிறகு (ஐபிஎல்-லில் காலிறுதிச் சுற்றே இல்லையேப்பா!) காவல்துறை போலி ஐபிஎல் போட்டியை நடத்திய அமைப்பாளர்களைச் சுற்றி வளைத்துள்ளது.

போலி ஐபிஎல் போட்டியில் விளையாடிய 21 பேரும் சென்னை, மும்பை, குஜராத் அணிகளின் சீருடைகளை அணிந்து விளையாடியுள்ளார்கள். ரசிகர்கள் போட்டியைப் பார்த்து ஆரவாரம் செய்வது போல போலியாக ஒலி ஏற்பாடுகள் செய்யப்பட்டு, யூடியூபில் கிரிக்கெட் ஆட்டங்களை நேரலையாக ஒளிபரப்பியுள்ளார்கள். சூதாட்டம் டெலிகிராம் வழியாக நடைபெற்றது. 

21 தொழிலாளர்கள் (இரு அணிகள் என்றாலும் 22 பேர் வேண்டுமே!) விளையாடிய கிரிக்கெட் ஆட்டங்கள் விளக்கொளியில்  நடத்தப்பட்டன. ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஓர் ஆட்டத்துக்கும் ரூ. 400 சம்பளமாக அளிக்கப்பட்டது. அனைவருக்கும் ஐபிஎல் அணிகளின் டி ஷர்ட்கள் வழங்கப்பட்டன. ஆட்டங்கள் கேமராவில் பதியப்பட்டு யூடியூபில் ஒளிபரப்பாகின. தரமான ஒளிப்பதிவுக்காக 5 ஹெச்.டி. கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. போலி ஹர்ஷா போக்ளேவின் வர்ணனையில் ஜம்மென்று போலி ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற, இதை நிஜ ஐபிஎல் போட்டி என நினைத்துப் பார்த்த ரஷியர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று சோயப்பும் ஆசிப் முகமதும் பாடாத குறைதான். 

கிரிக்கெட் ஆட்டங்களையும் சூதாட்டத்தையும் தன் கட்டுப்பாட்டில் வழிநடத்தியுள்ளார் சோயப். பந்து எப்படி வீசப்படவேண்டும், பேட்டர் எப்படி அடிக்க வேண்டும் என எல்லாமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டன. சோயப் கட்டளையின்படி ஃபோர், சிக்ஸர்களை நடுவர் அறிவிப்பார். வாக்கி டாக்கியில் நடுவருக்குத் தொடர்ந்து கட்டளைகள் பிறப்பித்துள்ளார் சோயப். பேட்டர் பந்தைத் தூக்கி அடித்தால் பந்து வானத்தில் பறந்து எங்கோ விழுவது போல கேமராவில் காண்பிக்கப்பட்டன. பண்ணையில் கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெற்றாலும் அது தெரியாதபடி ஒளிப்பதிவு செய்யப்பட்டன. லீக் ஆட்டங்கள் நடைபெற்று காலிறுதி வரை வந்துவிட்டார்கள். 

யூடியூபில் இந்த கிரிக்கெட் ஆட்டங்கள் ஒளிபரப்பாவதை அறிந்த காவல்துறை இதில் ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்து விசாரணை செய்ய, கடைசியில் அனைவரும் மாட்டிக் கொண்டார்கள். 

சரி, இத்தனை ஏற்பாடுகளும் செய்து எவ்வளவு வருமானம் கிடைத்தது?

என்ன செய்வது, காலிறுதிக்கு முன்பே காவல்துறையிடம் பிடிபட்டதால் ரூ. 3 லட்சம் வரைக்கும் தான் சம்பாதிக்க முடிந்திருக்கிறது. இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தால் இன்னும் பல மடங்கு வருமானம் ஈட்டியிருக்கலாம். 

தற்போது கிரிக்கெட் வீரர்களாக நடித்த 21 பேரிடமும் பண்ணை உரிமையாளரிடமும் காவல்துறை விசாரணை செய்து வருகிறது. தங்களை வைத்து சூதாட்டம் நடக்கிறது என்பதை அறியாமலேயே தொழிலாளர்கள் இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். ஒருநாளைக்கு ரூ. 400 தருவதாகச் சொன்னார்கள். எங்கள் ஊரில் பண்ணையில் வேலை செய்தால் ஒருநாளைக்கு ரூ. 300 தான் கிடைக்கும். எனவே இந்த வேலைக்கு ஒப்புக்கொண்டோம் என்று தொழிலாளர்கள் காவல்துறையிடம் கூறியுள்ளார்கள். 

ஐபிஎல் போட்டி என்றாலே பல சர்ச்சைகள் ஏற்படுவது இயல்பு. ஆடுகளத்திலும் ஆடுகளத்துக்கு வெளியேயும். சமீபகாலமாகத்தான் சூதாட்டம், மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டுகள் குறைந்துள்ளன. ஆனால் இப்போது ஐபிஎல் போட்டி முடிந்த பிறகும் அதை வைத்து ஓர் இடத்தில் சூதாட்டம் நடந்திருக்கிறது. இந்த வழக்கில் இன்னும் என்னென்ன உண்மைகள் வெளியே வரப்போகிறதோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com