ஆசியக் கோப்பை டி20 போட்டி எங்கு நடைபெறுகிறது?
By DIN | Published On : 19th July 2022 03:43 PM | Last Updated : 19th July 2022 03:43 PM | அ+அ அ- |

இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசியக் கோப்பை டி20 போட்டி, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடா்ந்து, மக்கள் கடந்த மாா்ச் மாதம் முதல் தொடா் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, கொழும்பில் உள்ள அதிபா் மாளிகையை பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோா் கடந்த 9-ஆம் தேதி முற்றுகையிட்டனா். கோத்தபய ராஜபட்ச சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். அவரும் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், இலங்கையில் மீண்டும் அவசர நிலையை ரணில் விக்ரமசிங்க திங்கள்கிழமை அறிவித்தாா்.
கொழும்பில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் கொழும்பிலிருந்து காலேவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசியக் கோப்பை டி20 போட்டி, இலங்கையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 போட்டி இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரக்த்தில் உள்ள துபை மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருக்கும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடா்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை இரண்டு மாதங்களில் பலமுறை உயா்த்தப்பட்டுள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டதால் இதுவரை இல்லாத அளவிலான பொருளாதாரப் பாதிப்பை இலங்கை சந்தித்து வருகிறது. எரிபொருள், உணவு, மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, அவற்றின் விலை பன்மடங்காக உயா்ந்துள்ளது.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி நடைபெறுகின்றன. ஆனால் ஆசியக் கோப்பைப் போட்டி என்பது 9 நாடுகள் பங்கேற்கக் கூடியது. அணிகளின் எண்ணிக்கை, எரிபொருள் பற்றாக்குறை, பலவீனமான பொதுப் போக்குவரத்து, தனியாா் வாகனங்களை இயக்குவதில் உள்ள சிரமம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ஆசியக் கோப்பை டி20 போட்டி இலங்கையிலிருந்து துபை, ஷார்ஜாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2018-ல் ஆசியக் கோப்பை 50 ஓவர் போட்டியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 2022 ஆசியக் கோப்பை டி20 போட்டியின் அட்டவணை ஜூலை 22 அன்று வெளியிடப்படுகிறது.