
உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீ. தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். ஃபின்லாந்தில் நடைபெற்ற பாவோ நுர்மி போட்டியில் 89.30 மீ. தூரம் எறிந்து 2-ம் இடம் பிடித்ததோடு புதிய தேசிய சாதனையையும் படைத்தார் நீரஜ் சோப்ரா. இதையடுத்து அமெரிக்காவில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் 88.13 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார் நீரஜ் சோப்ரா. கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.54 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்தார். இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மற்றொரு இந்தியரான ரோஹித் யாதவ், 12 பேர் கலந்துகொண்ட போட்டியில் 78.72 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 10-ம் இடம் பிடித்தார்.
உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 2-வது இந்தியர் நீரஜ் சோப்ரா. 2003-ல் பாரிஸில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்றார்.
ட்விட்டரில் நீரஜ் சோப்ரா கூறியதாவது:
(மைதானத்தில் காற்றின் வேகம் காரணமாக நிலவிய) கடினமான சூழலால் சிறிது தடுமாறினேன். அதேசமயம் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காகப் பதக்கம் வென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். (தங்கம், வெண்கலம் வென்ற) ஆண்டர்சன் பீட்டர்ஸ், ஜகுப் ஆகியோருக்கு வாழ்த்துகள். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.