ஐபிஎல் அனுபவம் உதவியது: அதிரடியாக விளையாடிய அக்ஷர் படேல்
By DIN | Published On : 25th July 2022 11:13 AM | Last Updated : 25th July 2022 11:13 AM | அ+அ அ- |

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. ஷாய் ஹோப் 115 ரன்களும் கேப்டன் பூரன் 74 ரன்களும் எடுத்தார்கள். ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து பரபரப்பான முறையில் வெற்றி பெற்றது. கடைசி 10 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 5 விக்கெட்டுகளே மீதமிருந்தன. ஆல்ரவுண்டரான அக்ஷர் படேல் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். ஷுப்மன் கில் 43, ஷ்ரேயஸ் ஐயர் 63, சஞ்சு சாம்சன் 54 ரன்கள் எடுத்தார்கள்.
அதிரடியான ஆட்டம் பற்றி அக்ஷர் படேல் கூறியதாவது:
மிகவும் சிறப்பான வெற்றி இது. தொடரின் வெற்றிக்கு உதவியதை அபார முயற்சியாக எண்ணுகிறேன். நான் களமிறங்கியபோது ஒரு ஓவருக்கு 10,11 ரன்கள் எடுக்க நினைத்தேன். ஐபிஎல் அனுபவத்தால் இதை முடிக்க முடியும் என எண்ணினோம். பதற்றம் இல்லாமல் பொறுப்புடன் விளையாடி ரன்ரேட்டை அடைந்தோம். 2017-க்குப் பிறகு நான் விளையாடும் ஒருநாள் ஆட்டம் இது. தொடர் வெற்றியால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்றார்.