மீண்டும் விளையாட வருகிறார் மிதாலி ராஜ்
By DIN | Published On : 26th July 2022 11:07 AM | Last Updated : 26th July 2022 11:07 AM | அ+அ அ- |

மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார் மிதாலி ராஜ்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல வீராங்கனை மிதாலி ராஜ் சமீபத்தில் அறிவித்தார். இந்திய மகளிர் அணிக்காக 12 டெஸ்டுகள், 232 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக இந்திய அணி பங்கேற்ற 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் விளையாடினார்.
மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக சபாஷ் மித்து உருவாகி சமீபத்தில் வெளியானது. தயாரிப்பு - வியாகாம்19 ஸ்டூடியோஸ். மிதாலி ராஜ் வேடத்தில் டாப்சி நடித்த படத்தை ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கினார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார் மிதாலி ராஜ். இதுபற்றி ஐசிசிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
எதைப் பற்றியும் நான் முடிவெடுக்கவில்லை. மகளிர் ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. முதல் மகளிர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க விரும்புகிறேன்.
ஓய்வுக்குப் பிறகு என் வாழ்க்கை மெதுவாக நகரும் என நினைத்தேன். இந்த நாள், அடுத்த வாரம், அடுத்தத் தொடர் பற்றி திட்டமிட வேண்டியதில்லை அல்லவா! ஓய்வை அறிவித்த பிறகு கரோனாவால் பாதிக்கப்பட்டேன். அதிலிருந்து மீண்ட பிறகு பட விளம்பரங்களில் பங்கேற்றேன். கிரிக்கெட் வீராங்கனையாக இருந்தது போல இப்போதும் வாழ்க்கை பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. இதெல்லாம் முடிந்த பிறகு ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையை உணர்வேன் என நினைக்கிறேன் என்றார்.