காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டா?: கேள்வி எழுப்பும் இந்திய வீரர்

இந்தியா அதிகப் பதக்கங்களைப் பெறுவதைத் தடுக்கவே இது நடக்கிறது.
காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டா?: கேள்வி எழுப்பும் இந்திய வீரர்

காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டை நீக்கிவிட்டு மகளிர் கிரிக்கெட்டைச் சேர்த்தது குறித்து ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற விஜய் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் ஆளப்பட்டு சுதந்திரம் பெற்ற நாடுகள் காமன்வெல்த் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. 53 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு காமன்வெல்த் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவற்றுக்கு காமன்வெல்த் முக்கியத்துவம் அளித்துவருகிறது. 53 நாடுகளே உறுப்பினர்களாக இருந்தாலும், 71 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கின்றனர். காமன்வெல்த் நாடுகளிடையே நெருக்கம், தோழமை ஏற்படும் வகையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்று அழைக்கப்படும் இப்போட்டிகளில் முதல் போட்டிகள் கடந்த 1930-ம் ஆண்டு தொடங்கியது.

24 வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 50 ஓவர் ஆடவர் கிரிக்கெட் இடம்பெற்றது. தென் ஆப்பிரிக்கா தங்கமும் ஆஸ்திரேலியா வெள்ளியும் பெற்றன. 2022 பிர்மிங்கம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா உள்பட எட்டு அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பார்படோஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 

பிர்மிங்கம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு இடம்பெறவில்லை. 2018 கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி 7 தங்கம் உள்பட 16 பதக்கங்களை அள்ளியது. தற்போது இந்த விளையாட்டு நீக்கப்பட்டதற்குச் துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 

2012 ஒலிம்பிக்ஸில் துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற விஜய் குமார் இதுபற்றி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

2026 காமன்வெல்த் போட்டிகளிலும் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக்கு இடமில்லை என்று தகவல் அறிந்தேன். காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா அதிகப் பதக்கங்களைப் பெறுவதைத் தடுக்கவே இது நடக்கிறது. இந்த விளையாட்டில் இந்திய அணி பெரிய சக்தியாக உள்ளது. இதனால் நாம் குறிவைக்கப்பட்டுள்ளதாகவே அனைவரும் உணர்கிறோம். ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் விளையாட்டுகளில் துப்பாக்கிச் சுடுதலை மட்டும் நீக்கியுள்ளார்கள். இந்த விளையாட்டில் தான் நாம் அதிகப் பதக்கங்களைப் பெறுகிறோம்.

ஒலிம்பிக்ஸில் இடம்பெறாத விளையாட்டுகளை பிர்மிங்கமில் சேர்த்துள்ளார்கள். ஒலிம்பிக்ஸ், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றுக்கு அடுத்ததாக காமன்வெல்த் போட்டிகள் மதிக்கப்படுகின்றன. பல வீரர்களின் வாழ்க்கை காமன்வெல்த் போட்டிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்துள்ளது. ஒலிம்பிக்ஸில் உள்ள விளையாட்டை எடுத்துவிட்டு ஒலிம்பிக்ஸில் இல்லாத விளையாட்டைச்  சேர்க்கிறீர்கள். மகளிர் கிரிக்கெட்டைச் சேர்த்துவிட்டு, துப்பாக்கிச் சுடுதல் போன்ற ஒலிம்பிக்ஸ் விளையாட்டை நீக்குவது ஆச்சர்யமாக இல்லை? இது தவறான முடிவு என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com