தென்னாப்பிரிக்கா வெற்றி: தகர்ந்த இந்திய அணியின் கனவு

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்க அணி.
தென்னாப்பிரிக்கா வெற்றி: தகர்ந்த இந்திய அணியின் கனவு
Published on
Updated on
2 min read

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்க அணி.

தில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 76 ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 36 ரன்களும் பாண்டியா 12 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் எடுத்தார்கள். தென்னாப்பிரிக்க அணி, 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 11-வது ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துத் தடுமாறிக் கொண்டிருந்தது தென்னாப்பிரிக்க அணி. ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் மில்லரும் வாண் டர் டுசெனும் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்கள். டுசென் 46 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 75 ரன்களும் மில்லர் 31 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தார்கள். ஆட்ட நாயகனாக மில்லர் தேர்வானார்.

கடந்த பிப்ரவரி மாதம், இலங்கைக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தை வென்ற இந்திய அணி, தொடர்ச்சியாக அதிக டி20 ஆட்டங்களில் வென்ற அணி என்கிற சாதனையைச் சமன் செய்தது. இலங்கையை வீழ்த்தி, டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 12 வெற்றிகளைப் பெற்றது இந்திய அணி. டி20 கிரிக்கெட்டில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அணிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற ஆப்கானிஸ்தானின் உலக சாதனையை இந்திய அணி சமன் செய்தது. இரு அணிகளும் தொடர்ச்சியாகத் தலா 12 வெற்றிகளைப் பெற்றன. அதே 12 தொடர்ச்சியான வெற்றிகளுடன் உலக சாதனையைக் கொண்டுள்ள இன்னொரு அணி, ரொமானியா. எனினும் அது டெஸ்ட் விளையாடும் தேசம் அல்ல. அந்த அணி சிறிய நாடுகளுடன் விளையாடி அச்சாதனையை நிகழ்த்தியுள்ளது.

தொடர்ச்சியான 12 வெற்றிகளுடன் உலக சாதனையைச் சமன் செய்த இந்திய அணி, தில்லியில் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தால் 13 வெற்றிகளுடன் புதிய உலக சாதனை படைத்திருக்கும். ஆனால் மில்லர் - டுசென் அதிரடியால் அந்தக் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. இதனால் இந்தியா, ஆப்கானிஸ்தான், ரொமானியா ஆகிய மூன்று நாடுகளும் தொடர்ச்சியாகத் தலா 12 வெற்றிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளன. மூன்று அணிகளாலும் 13-வது வெற்றியை அடைய முடியாமல் போய்விட்டது. இனிமேல் எந்த அணி தொடர்ச்சியாக 13 வெற்றிகளைப் பெறுகிறதோ அந்த அணியால் மட்டுமே புதிய உலக சாதனை படைக்க முடியும். 

டி20யில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள்

ஆப்கானிஸ்தான்: 12 வெற்றிகள் - 2018 பிப்ரவரி 5 முதல் 2019 செப்டம்பர் 15 வரை
ரொமானியா: 12 வெற்றிகள் - 2020 அக்டோபர் 17 முதல் 2021 செப்டம்பர் 5 வரை
இந்தியா: 12 வெற்றிகள் - 2021 நவம்பர் 3 முதல் 2022 பிப்ரவரி 27 வரை 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com