ஒன்றா இரண்டா... பல உலக சாதனைகளை நிகழ்த்திய இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி 26 சிக்ஸர்களை அடித்தது....
பட்லர் (கோப்புப் படம்)
பட்லர் (கோப்புப் படம்)

இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. 

நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் எடுத்தது. சால்ட் 122, மலான் 125, பட்லர் 162 ரன்கள் எடுத்தார்கள். லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 66 ரன்களும் பட்லர் 70 பந்துகளில் 14 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 162 ரன்களும் எடுத்தார்கள். இதன்பிறகு விளையாடிய நெதர்லாந்து அணி, 49.4 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்து 232 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக பட்லர் தேர்வானார்.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பல உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

* 498/4 - ஒருநாள் ஆடவர் கிரிக்கெட்டில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது. இதற்கு முன்பு இங்கிலாந்து அணி 2018-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 481/6 எடுத்திருந்தது. 

* ஆடவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டிலும் இதுவே அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன்பு 2007-ல் சர்ரே அணி குளோசஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக 496/4 ரன்கள் எடுத்திருந்தது. 

* இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 26 சிக்ஸர்களை அடித்தது. இதுவும் ஓர் உலக சாதனை. இதற்கு முன்பு 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் அந்த அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 25 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. 

* 36 ஃபோர்கள், 26 சிக்ஸர்கள் என பவுண்டரிகள் மூலமாக 300 ரன்களை எடுத்த முதல் ஒருநாள் அணி என்கிற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது. 

* 3 இங்கிலாந்து பேட்டர்கள் சதங்களை எடுத்தார்கள். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இதுபோல நடப்பது 3-வது முறை. இதற்கு முன்பு தெ.ஆ. அணி, 2015-ல் மே.இ. தீவுகள், இந்தியா ஆகியவற்றுக்கு எதிராகத் தலா 3 சதங்களை அடித்தது. 

* கடைசி 10 ஓவர்களில் 164 ரன்கள் அடித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளது இங்கிலாந்து அணி. இதற்கு முன்பு தென்னாப்பிரிக்க அணி, 2015-ல் மே.இ. தீவுகளுக்கு எதிராகக் கடைசி 10 ஓவர்களில் 163 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. 

* 50 மற்றும் அதற்குக் குறைவான பந்துகளில் 3 முறை சதங்கள் அடித்த முதல் வீரர் ஜாஸ் பட்லர். பாகிஸ்தானுக்கு எதிராக 46, 50 பந்துகளிலும் நெதர்லாந்துக்கு எதிராக 47 பந்துகளிலும் அவர் சதங்கள் அடித்துள்ளார். குறைவான பந்துகளில் சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் பட்லரே உள்ளார். 

* குறைந்த பந்துகளில் 150 ரன்களை எடுத்த வீரர்களில் பட்லருக்கு 2-வது இடம். பட்லர் 65 பந்துகளிலும் டி வில்லியர்ஸ் 64 பந்துகளிலும் 150 ரன்களை எடுத்துள்ளார்கள். 

* 17 பந்துகளில் அரை சதம் எடுத்தார் லிவிங்ஸ்டன். குறைந்த பந்துகளில் அரை சதம் எடுத்த இங்கிலாந்து வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இதற்கு 2-வது இடம். 16 பந்துகளில் அரை சதமெடுத்த டி வில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com