2019 நவம்பர் 23 அன்று வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற டெஸ்டில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. அது அவருடைய 70-வது சதம். 27-வது டெஸ்ட் சதம். அடுத்த இரண்டரை வருடங்களில், கோலியால் ஒரு சதமும் எடுக்க முடியவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் நாளை நடைபெறவுள்ள நிலையில் விராட் கோலி பற்றி இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:
அருமையான உடற்தகுதி கொண்ட, கடினமாக உழைக்கக் கூடியவர் விராட் கோலி. பயிற்சி ஆட்டத்தில் அச்சூழலில் அவர் எடுத்த 50, 60 ரன்களும் முக்கியமானவை. சதம் அடிக்க முடியாத இந்த நிலை எல்லா வீரர்களும் எதிர்கொண்டதுதான். ஊக்கமில்லாமல் கோலி விளையாடுகிறார் என்கிற பேச்சுக்கு இடமில்லை. சதங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. கேப்டவுனில் 70 ரன்கள் எடுத்தது அருமையான இன்னிங்ஸ், அது சதமாக மாறாவிடிலும்.
விராட் கோலி போன்ற ஒரு வீரர், அவர் நிர்ணயித்த தரம், எடுத்த சதங்களின் எண்ணிக்கை போன்றவற்றால் சதமெடுப்பதைத்தான் வெற்றிக்கான அளவுகோலாக மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் ஒரு பயிற்சியாளராக, ஆட்டத்தின் வெற்றிக்குப் பங்களிக்கும் 50, 60 ரன்கள் கூட முக்கியமானவை. எங்களுடைய கோணத்தில், அவர் சதமடிப்பதில் அதிகக் கவனம் செலுத்துவதில்லை. பங்களிப்பே முக்கியம். ஆடுகளத்திலும் வெளியேயும் அவர் தொடர்ந்து பங்களித்து, அணிக்குப் பெரிய ஊக்கமாக உள்ளார் என்றார்.