இதை ஒரு சாக்குப்போக்காக நாங்கள் கூறக் கூடாது: வங்கதேச கேப்டன்

நியாயம், அநியாயம் என எங்கள் ஓய்வறையில் யாரும் பேசவில்லை.
இதை ஒரு சாக்குப்போக்காக நாங்கள் கூறக் கூடாது: வங்கதேச கேப்டன்

மழையால் உண்டான சூழலை தோல்விக்கான சாக்குப்போக்காகக் கூறக் கூடாது என்று வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறியுள்ளார். 

வங்கதேசத்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை டி/எல் முறையில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அடிலெய்டில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி  20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 64, ராகுல் 50 ரன்கள் எடுத்தார்கள். மழை காரணமாக வங்கதேச அணி இன்னிங்ஸில் 7-வது ஓவரின் முடிவில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது வங்கதேச அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்திருந்தது. மழை நின்றபிறகு வங்கதேச அணிக்குப் புதிய இலக்கு அளிக்கப்பட்டது. 16 ஓவர்களில் 151 ரன்கள். அதாவது மீதமுள்ள 9 ஓவர்களில் 85 ரன்கள் எடுக்க வேண்டும். வங்கதேச அணி 16 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. நுருல் 25 ரன்களும் டஸ்கின் அஹமது 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். டி/எல் முறையில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த இந்திய அணிக்கு அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

மழை நின்ற பிறகு உடனடியாக ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டதால் வங்கதேச பேட்டர்களால் வேகமாக ஓட முடியவில்லை, பந்து வேகமாக பவுண்டரிக்குச் செல்லவில்லை என வங்கதேச ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். இந்நிலையில் இந்த ஆட்டம் பற்றி வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறியதாவது:

நியாயம், அநியாயம் என எங்கள் ஓய்வறையில் யாரும் பேசவில்லை. மழை நின்றவுடன் விளையாடுவதற்கும் வெற்றி பெறவும் ஆர்வமாக இருந்தோம். வெற்றிக்காக எல்லோரும் நன்றாக முயன்றார்கள். ஆனாலும் சில ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். மழை நின்றவுடன் ஆட்டம் 10-15 நிமிடங்கள் கழித்து ஆரம்பிக்க வேண்டுமா என்பது பற்றி நடுவர்கள் தான் முடிவெடுத்திருக்க வேண்டும். நாங்கள் அந்த முடிவை எடுக்க விரும்பவில்லை. இரு அணிகளும் முழு 20 ஓவர்களை விளையாட விருப்பப்பட்டோம். ஆனால் மழை குறுக்கிட்டது. நல்ல உணர்வுகளுடன் இரு அணிகளும் விளையாடின. 2016 உலகக் கோப்பை ஆட்டம் போல அமைந்தது. மழைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியபோது கால் கொஞ்சம் வழுக்குவது போலவே மைதானத்தின் தன்மை இருந்தது. இதுபோன்ற சூழல் பந்துவீசும் அணியை விடவும் பேட்டிங் அணிக்கே சாதகமாக இருக்கும். எனவே நாங்கள் சாக்குப்போக்குக் கூறக்கூடாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com