பாலியல் புகார்: கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இலங்கை வீரருக்குத் தடை!
By DIN | Published On : 07th November 2022 03:08 PM | Last Updated : 07th November 2022 03:08 PM | அ+அ அ- |

பாலியல் வன்கொடுமை புகாா் எதிரொலியாக டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி வீரா் தனுஷ்கா குணதிலகாவை (31) ஆஸ்திரேலியக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.
ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கை அணியின் வீரா் தனுஷ்கா குணதிலகாவை பாலியல் வன்கொடுமை புகாா் தொடா்பாக சிட்னி காவல்துறையினர் கைது செய்தனா். கடந்த 2-ஆம் தேதி 29 வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனுஷ்கா மீது புகாா் எழுந்தது. சமூகவலைத்தளம் மூலம் அப்பெண்ணுடன் தனுஷ்கா குணதிலகா தொடா்பு கொண்டாா் எனக் காவல்துறை கூறியுள்ளது. இங்கிலாந்திடம் தோற்று போட்டியில் இருந்து வெளியேறிய இலங்கை அணி தனுஷ்கா குணதிலகா இன்றி நாடு திரும்பியது. நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டக் அவுட்டான தனுஷ்கா காயமடைந்ததால் அடுத்த ஆட்டங்களில் இடம் பெறவில்லை. எனினும் அவர் மாற்று வீரராக அணியில் தொடர்ந்து இடம்பெற்றார்.
இந்நிலையில் பாலியல் புகாா் காரணமாக தனுஷ்கா குணதிலகா அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபடுவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. இதற்கு முன்பு விதிமுறைகளை மீறிய நடவடிக்கைகளுக்காக மூன்று முறை அவருக்கு இடைக்காலத் தடை விதித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். தற்போது மீண்டும் அவருக்குத் தடை விதித்துள்ளது. தீவிரமான குற்றச்சாட்டுகள் காரணமாக தனுஷ்கா குணதிலகாவுக்குப் பிணை வழங்க சிட்னி நீதிமன்றம் மறுத்துள்ளது.
இலங்கை அணிகாக தனுஷ்கா குணதிலகா 8 டெஸ்ட், 47 ஒருநாள், 46 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.