2023 ஐபிஎல் போட்டியிலும் தோனியே கேப்டன்: உறுதி செய்த காசி விஸ்வநாதன்!
By DIN | Published On : 16th November 2022 12:50 PM | Last Updated : 16th November 2022 12:50 PM | அ+அ அ- |

2023 ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனியே நீடிப்பார் என தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
2022 ஐபிஎல் போட்டியின்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். எனினும் போட்டியின் பாதியில் அவர் பதவி விலகினார். இதனால் சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தேர்வானார் தோனி. இந்நிலையில் 2023 ஐபிஎல் போட்டி பற்றி சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாவது:
எல்லோருக்கும் தெரியும், 2023 ஐபிஎல் போட்டியிலும் தலைவன் தான் (தோனி) அணியை வழிநடத்துவார் என்று. இந்தமுறை சிஎஸ்கே அணி நன்றாக விளையாடும். வீரர்களைத் தக்கவைக்கும் பணி மிகவும் கடினமானது. ஏனெனில் சிஎஸ்கே அணி அதன் வீரர்கள் மீது மிகவும் பாசத்துடன் இருக்கும். அவர்களும் அணிக்காக நன்குப் பங்களிப்பார்கள். வீரர்களை விடுவிக்கும் முடிவை எடுப்பது கடினமான ஒன்றாகும். விடுவிக்கப்பட்ட வீரர்கள் அணிக்கு மீண்டும் திரும்ப ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் வருவார்கள். ஒருமுறை மோசமாக விளையாடினோம். அடுத்த வருடமே (2021) கோப்பையை வென்றோம். அதேபோல இந்த வருடமும் நடக்கலாம். கடந்த இரண்டு வருடங்களாக எங்களால் சொந்த மண்ணில் விளையாட முடியவில்லை. தற்போது மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடப் போகிறோம். அதை மனத்தில் கொண்டு தான் வீரர்களைத் தேர்வு செய்துள்ளோம் என்றார்.