உலகக் கோப்பை: 8-ம் நாள் புள்ளிவிவரங்கள்

உலகக் கோப்பையில் இதுவரை முதல் இரு ஆட்டங்களிலும் ஜெர்மனி தோற்றதேயில்லை.
கோஸ்டா ரிக்கா வீரர்கள்
கோஸ்டா ரிக்கா வீரர்கள்

உலகக் கோப்பைப் போட்டியின் 8-ம் நாளில் கோஸ்டா ரிக்கா, மொராக்கோ, குரோசியா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி - ஸ்பெயின் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

கோஸ்டா ரிக்கா, ஜப்பானை 1-0 எனவும் மொராக்கோ, பெல்ஜியத்தை 2-0 எனவும் குரோசியா கனடாவை 4-1 எனவும் வீழ்த்தின. 

8-ம் நாள் ஆட்டங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்:

* 1970 முதல் இந்தப் போட்டி வரை உலகக் கோப்பைக்கு 6 முறை தகுதி பெற்றுள்ளது மொராக்கோ அணி. 1986-ல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் பெல்ஜியத்தை 2-0 என வீழ்த்தியது மொராக்கோ. உலகக் கோப்பையில் அந்த அணி பெறும் 3-வது வெற்றி இது. முதல் வெற்றியை 1986-ல், 2-வது வெற்றியை 1998-ல் அடைந்தது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோ, மூன்று முறையும் ஐரோப்பிய அணிகளுக்கு எதிராக வென்றுள்ளது. 

* உலகின் நெ.2 அணியான பெல்ஜியம், 14 முறை உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. 2018 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறி 3-ம் இடம் பிடித்தது. இப்பேர்ப்பட்ட அணி இந்த உலகக் கோப்பையில் விளையாடிய இரு ஆட்டங்களில் கனடாவை 1-0 என வீழ்த்தி அடுத்த ஆட்டத்தில் மொராக்கோவிடம் 0-2 எனத் தோற்றுள்ளது. அதாவது முதல் இரு ஆட்டங்களில் ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்துள்ளது. ஆனால் கடந்த உலகக் கோப்பையில் முதல் இரு ஆட்டங்களில் மட்டும் 8 கோல்களை அடித்தது. 

* இந்த ஆட்டத்துக்கு முன்பு உலகக் கோப்பையில் பெல்ஜியம் கடைசியாக விளையாடிய 8 குரூப் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. கடைசியாக 1994-ல் 0-1 என சவூதி அரேபியாவிடம் தான் குரூப் ஆட்டத்தில் தோற்றது. பிறகு விளையாடிய குரூப் ஆட்டங்களில் 8 வெற்றி, 5 டிராக்களுக்குப் பிறகு முதல்முறையாகத் தோல்வியை எதிர்கொண்டுள்ளது. 

* உலகக் கோப்பையில் முதல்முறையாக ஆப்பிரிக்க நாட்டிடம் தோற்றுள்ளது பெல்ஜியம். 

* உலகக் கோப்பையில் நேற்று வரை அடிக்கப்பட்ட 67 கோல்களில் 58% கோல்கள் அதாவது 39 கோல்கள் ஆட்டத்தின் கடைசி 30 நிமிடங்களில் அடிக்கப்பட்டவை.

* குரோசியாவிடம் 1-4 எனத் தோற்ற கனடா, போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. 1986-க்குப் பிறகு 2-வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் கனடா, முதல்முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் ஒரு கோலை அடித்துள்ளது. அதுவும் ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே கோலடித்தார் கனடாவின் அல்போன்சோ டேவிஸ். 

* இந்த உலகக் கோப்பையில் விரைவாக கோலடித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் கனடாவின் டேவிஸ். உலகக் கோப்பையில் குரூப் ஆட்டங்களில் விரைவாக அடித்த கோல்களில் இதற்கு 2-வது இடம். 2014-ல் கானாவுக்கு எதிராக அமெரிக்காவின் கிளிண்ட் டிம்ப்சி ஆட்டம் தொடங்கிய 29-வது நொடியில் கோலடித்து சாதனை படைத்தார்.

* உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் கனடா தோல்வியடைந்துள்ளது. மெக்சிகோ (முதல் 9 ஆட்டங்களில் தோல்வி), எல் சால்வடோர் (அனைத்து 6 ஆட்டங்களிலும் தோல்வி) ஆகிய அணிகளுக்கு அடுத்த நிலையில் கனடா உள்ளது. 

* ஃபிஃபா உலகக் கோப்பையில் கோலடித்த 76-வது நாடு - கனடா. இதற்கு முன்பு கோலடித்த 75-வது நாடானது கத்தார். 2026 உலகக் கோப்பையில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றாக கனடா பங்கேற்கவுள்ளது. 

* ஜெர்மனி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானிடம் தோற்றது. ஸ்பெயினுக்கு எதிராக 1-1 என டிரா செய்துள்ளது. நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜெர்மனி அணி, 1938-க்குப் பிறகு முதல்முறையாக முதல் இரு குரூப் ஆட்டங்களிலும் ஒரு வெற்றியையும் அடையாமல் உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் மட்டும் ஜப்பான் வென்றிருந்தால் ஜெர்மனிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். ஸ்பெயினை வீழ்த்தாவிடால் கத்தார், கனடா அணிகளுக்கு அடுத்ததாக ஜெர்மனி 2 ஆட்டங்களிலேயே போட்டியிலிருந்து வெளியேறியிருக்கும். ஜப்பான் தோற்றதால் ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டம் டிரா ஆன பிறகும் ஜெர்மனிக்கு அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற இன்னும் வாய்ப்புள்ளது. 

* உலகக் கோப்பையில் இதுவரை முதல் இரு ஆட்டங்களிலும் ஜெர்மனி தோற்றதேயில்லை. அந்த நிலை இந்தமுறையும் தொடர்ந்துள்ளது. 

* ஜெர்மனியை 2-1 என வென்றது ஜப்பான். ஆனால் கோஸ்டா ரிக்கா, ஸ்பெயினுக்கு எதிராக 0-7 எனத் தோற்றது. எனவே அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கும் ஜப்பான். ஆனால் கோஸ்டா ரிக்கா 1-0 என ஜப்பானை வீழ்த்தியுள்ளது. 1998 முதல், உலகக் கோப்பைக்கு 7 முறை தகுதி பெற்றுள்ளது ஜப்பான். காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு மூன்று முறை தகுதி பெற்றது. இந்தமுறையும் அதற்கான நல்ல வாய்ப்பு கிடைத்தும் உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. கடைசி ஆட்டத்தில் இன்னொருமுறை வெல்ல வேண்டிய நிலைமையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com