ஆஸ்திரேலியாவில் தரமான சம்பவம் நடைபெறப் போகிறது: மே.இ. தீவுகள் முன்னாள் கேப்டன் கணிப்பு

கடந்தமுறை யாரிடமிருந்து விக்கெட்டுகள் கிடைக்கும் எனத் தெரியாமல் இருந்தோம். இந்தமுறை அப்படியல்ல.
நிகோலஸ் பூரன் - அகேல் ஹுசைன்
நிகோலஸ் பூரன் - அகேல் ஹுசைன்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நன்றாக விளையாடும் என முன்னாள் கேப்டன் டேரன் சமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கையைப் போல மேற்கிந்தியத் தீவுகள் அணியும் தகுதிச்சுற்றில் விளையாடி அதில் தேர்ச்சி பெற்ற பிறகுதான் பிரதான சுற்றில் இடம்பெற முடியும். 2012, 2016 டி20 உலகக் கோப்பைப் போட்டிகளை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2021 நவம்பர் 15 அன்று தரவரிசையின் அடிப்படையில் 10-வது இடத்தில் இருந்தது. முதல் 8 இடங்களில் இல்லாத காரணத்தால் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அணிகள் தகுதிச்சுற்றில் விளையாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் 21 வரை நடைபெறும் முதல் சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, நமிபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 8 அணிகள் போட்டியிடவுள்ளன. இந்த 8 அணிகளில் இருந்து 4 அணிகள் பிரதான சுற்றுக்குத் தேர்வாகும்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் மே.இ. தீவுகள் அணியின் வாய்ப்பு குறித்து முன்னாள் கேப்டன் டேரன் சமி கூறியதாவது:

கேப்டன் நிகோலஸ் பூரனிடம் தற்போது தான் பேசினேன். வீரர்கள் போட்டிக்கு நன்றாகத் தயாராகி வருவதாகக் கூறினார். இந்த அணி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஏனெனில் ஏராளமான திறமைசாலிகள் உள்ளார்கள். இந்தமுறை ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், விக்கெட்டுகளை எடுக்கும் பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள். கடந்தமுறை யாரிடமிருந்து விக்கெட்டுகள் கிடைக்கும் எனத் தெரியாமல் இருந்தோம். இந்தமுறை அப்படியல்ல. இந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியை நான் ஒருபோதும் புறந்தள்ள மாட்டேன். ஆஸ்திரேலியாவில் தரமான சம்பவம் ஒன்று நடைபெறப் போகிறது என எனக்குத் தோன்றுகிறது என்று கூறியுள்ளார். 

2012, 2016-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டிகளை டேரன் சமியின் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com