டி20 உலகக் கோப்பையை விட பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முக்கியம்: ரோஹித் சர்மா
By DIN | Published On : 15th October 2022 05:00 PM | Last Updated : 15th October 2022 05:00 PM | அ+அ அ- |

ஜஸ்பிரித் பும்ரா இன்னும் அதிகமான கிரிக்கெட் போட்டிகள் விளையாட வேண்டியுள்ளதால் அவரை ரிஸ்க் எடுக்க விரும்பவில்லையென கேப்டன் ரோகித் சர்மா கருத்துத் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதற்காக ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பயிற்சி மேற்கொண்டிருக்கும் இந்திய அணி இதுவரை இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியுள்ளது. பிரிஸ்பேனில் மேலும் இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணி முதல் உலகக் கோப்பை ஆட்டமாக அக்டோபர் 23 அன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது.
இந்நிலையில் காயம் காரணமாக விலகிய பும்ராவுக்குப் பதிலாக இந்திய அணியில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் ரோகித் பும்ரா பற்றி கூறியதாவது:
பும்ராவின் காயம் பற்றி பல நிபுணர்களிடம் விசாரித்தோம். யாரும் அவரை விளையாட பரிந்துரைக்கவில்லை. அந்தளவுக்கு காயம் உள்ளது. டி20 உலகக் கோப்பை முக்கியம்தான். ஆனால், அதைவிட அவரது அவரது கிரிக்கெட் வாழ்கை முக்கியம். அவருக்கு இப்போதுதான் 27-28 வயதாகிறது. அவர் விளையாட வேண்டிய கிரிக்கெட் இன்னும் அதிகமிருக்கிறது. அதனால் அவர் விவகாரத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது. அவரை மிஸ் செய்கிறோம் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.