சர்ச்சைகளுக்கு நடுவே சாதித்த தீப்தி சர்மா!

சர்ச்சைகளுக்கு நடுவே சாதித்த தீப்தி சர்மா!

இந்தியாவின் தீப்தி சர்மா, போட்டியின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் தீப்தி சர்மா, போட்டியின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியின் இறுதிச்சுற்றில் இலங்கையை எளிதாக வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான இந்திய அணி. இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது. இந்திய மகளிர் அணி பெரிய சிரமம் இல்லாமல் 8.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டம் வென்றது. தொடக்க வீராங்கனை மந்தனா 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 7-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. 

இறுதி ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக ரேணுகா சிங்கும் போட்டியின் சிறந்த வீராங்கனையாக தீப்தி சர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 

கடந்த ஒரு மாதமாக ரன் அவுட் சர்ச்சையில் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மாவின் பெயரும் அவருடைய செயலும் அதிகமாக விமர்சிக்கப்பட்டது, விவாதிக்கப்பட்டது. 

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய மகளிர் அணி. கடைசி ஒருநாள் ஆட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. எதிர்முனையில் பந்துவீசும் முன்பு வெளியேறிய இங்கிலாந்து பேட்டர் சார்லி டீனை ரன் அவுட் செய்தார் தீப்தி சர்மா. அவுட் என நடுவர் தீர்ப்பு வழங்கினாலும் கிரிக்கெட்டின் மாண்பைக் குறைக்கும் செயல் எனப் பிரபல இங்கிலாந்து வீரர்களான ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், சாம் பில்லிங்ஸ் எனப் பலரும் தீப்தி சர்மாவின் நடவடிக்கையைக் குறை கூறினார்கள். இதனால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டு சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 

சர்ச்சைகளில் சிக்கினாலும் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார் 25 வயது தீப்தி சர்மா. ஃபீல்டிங்கிலும் தனது முத்திரையைப் பதித்தார். 8 இன்னிங்ஸில் 13 விக்கெட்டுகள் எடுத்த தீப்தி சர்மா, பேட்டிங்கில் 1 அரை சதம் உள்பட 94 ரன்கள் எடுத்தார். அரையிறுதியில் 7 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பரிசளிப்பு விழாவில் தீப்தி சர்மா பேசியதாவது:

அணியினருடன் விவாதித்த விஷயங்களை ஆடுகளத்தில் செயல்படுத்தினேன். எந்தப் பகுதியில் பந்துவீச வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன். போட்டிக்கு முன்பு என்னுடைய பேட்டிங்கிலும் கவனம் செலுத்தியதால் ரன்கள் எடுத்துள்ளேன். இந்த வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com