நான் தீப்தி சர்மா இல்லை: சர்ச்சையைக் கிளப்பிய ஸ்டார்க்கின் பேச்சு!

எச்சரிக்கை செய்யும் விதமாக ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நான் தீப்தி சர்மா இல்லை: சர்ச்சையைக் கிளப்பிய ஸ்டார்க்கின் பேச்சு!

கிரீஸை விட்டு வெளியேறிய பேட்டரை எச்சரிக்கை செய்யும் விதமாக ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என வென்றது இங்கிலாந்து. கான்பெராவில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 12 ஓவர்களில் 112 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி. டிஎல்எஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்களில் 130 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆஸி. அணி 3.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டது. பிறகு மழை காரணமாக 3-வது டி20 ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் டி20 தொடரை 2-0 என வென்றது இங்கிலாந்து. 

இந்த ஆட்டத்தின்போது பேட்டரை எச்சரிக்கை செய்யும் விதமாக ஸ்டார்க் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து இன்னிங்ஸின்போது 5-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். அப்போது மறுமுனையில் நின்றுகொண்டிருந்த பட்லர், ஸ்டார்க் பந்துவீசியபோது கிரீஸை விட்டு வெளியேறினார். பந்துவீசி முடித்த பிறகு பட்லர் பக்கம் திரும்பிய ஸ்டார்க், நான் தீப்தி (சர்மா) இல்லை. நான் (ரன் அவுட்) செய்ய மாட்டேன். அதற்காகப் பந்துவீசும் முன்பே கிரீஸை விட்டு வெளியேறக் கூடாது என்றார். இதற்குப் பதிலளித்த பட்லர், நான் அதுபோல செய்யவில்லை என்றார். 

மறுமுனையில் உள்ள பேட்டர் பந்துவீசும் முன்பே கிரீஸை விட்டு வெளியேறினால் அவரை  ரன் அவுட் செய்யலாம் அல்லது எச்சரிக்கை கொடுக்கலாம். அதற்குப் பதிலாகத் தேவையில்லாமல் தீப்தி சர்மாவை வம்புக்கு இழுப்பது ஏன் எனப் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்கள். 

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய மகளிர் அணி. கடைசி ஒருநாள் ஆட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. எதிர்முனையில் பந்துவீசும் முன்பு வெளியேறிய இங்கிலாந்து பேட்டர் சார்லி டீனை ரன் அவுட் செய்தார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா. அவுட் என நடுவர் தீர்ப்பு வழங்கினாலும் கிரிக்கெட்டின் மாண்பைக் குறைக்கும் செயல் எனப் பிரபல இங்கிலாந்து வீரர்களான ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், சாம் பில்லிங்ஸ் எனப் பலரும் தீப்தி சர்மாவின் நடவடிக்கையைக் குறை கூறினார்கள். இதனால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டு சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் ஸ்டார்க்கும் தீப்தி சர்மாவின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com