பாகிஸ்தானை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி
By DIN | Published On : 27th October 2022 09:33 PM | Last Updated : 27th October 2022 09:33 PM | அ+அ அ- |

உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஜிம்பாப்வே 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 31 ரன்கள் குவித்தார்.
இதையும் படிக்க: நடிகர் விக்ரமை பாராட்டிய டிவிட்டர் நிறுவனம்
இதனையடுத்து, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது பாகிஸ்தான். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முஹமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினர். இந்த இணை அதிக அளவில் ரன் குவிக்க முடியவில்லை. கேப்டன் பாபர் அசாம் 4 ரன்களிலும், முஹமது ரிஸ்வான் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் ஷான் மசூத் களமிறங்கினார். அவர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் மறுமுனையில் விளையாடிய வீரர்கள் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இஃப்திகார் அஹமது 5 ரன்களிலும், ஷதாப் கான் 17 ரன்களிலும், ஹைதர் அலி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின், மசூத் உடன் ஜோடி சேர்ந்தார் முஹமது நவாஸ். முஹமது நவாஸ் அதிரடியாக ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாச பாகிஸ்தான் அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்கள் குறைந்தது. நிதானமாக விளையாடிய ஷான் மசூத் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க: விஜய்க்கு வில்லனாகும் பிரபல இயக்குநர்
பாகிஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டன. அந்த அணி முதல் 3 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தது. இதனால் அடுத்த 3 பந்துகளில் அந்த அணிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஆனால், ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிராட் ஈவன்ஸ் சிறப்பாக பந்து வீசி 4வது பந்தில் ரன் கொடுக்காமலும், 5வது பந்தில் முஹமது நவாஸின் விக்கெட்டினை வீழ்த்தினார். இதனால், கடைசி பந்தில் பாகிஸ்தானுக்கு 3 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால், பாகிஸ்தான் கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது ஜிம்பாப்வே.
இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் தனது அடுத்த போட்டியில் வெற்றிப் பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G