ஜிம்பாப்வே வீரரை ஊக்கப்படுத்தி விருது பெற வைத்த ரிக்கி பாண்டிங்!

ரிக்கி பாண்டிங் பேசியது கண்ணீரை வரவழைத்ததாகக் கூறினார்கள். எனக்குப் புல்லரித்து விட்டது.
ஜிம்பாப்வே வீரரை ஊக்கப்படுத்தி விருது பெற வைத்த ரிக்கி பாண்டிங்!

பாகிஸ்தானை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது ஜிம்பாப்வே அணி.

பெர்த் நகரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. வில்லியம்ஸ் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். முகமது வாசிம் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

இலக்கை விரட்டியபோது தடுமாறிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசிப் பந்தில் வெற்றி பெற 3 ரன்கள் தேவைப்பட்டபோது 1 ரன் மட்டும் எடுத்து ரன் அவுட் ஆனார் ஷாஹீன் அப்ரிடி. சிகந்தர் ராஸா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாட பாண்டிங் எந்தளவுக்கு ஊக்கப்படுத்தினார் என்பது பற்றி சிகந்தர் ராஸா கூறியதாவது:

இன்று காலை ரிக்கி பாண்டிங் பேசிய சிறிய காணொளி எனக்குக் கிடைத்தது. அதைப் பார்த்து நான் மிகவும் ஊக்கம் அடைந்தேன். இந்த ஆட்டத்தில் நன்கு விளையாட ஆர்வமாக இருந்தேன். ஊக்கம் எப்போதும் இருக்கும். ஆனால் சிறு உந்துதல் தேவை. பாண்டிங்கின் பேச்சு என்னை இன்னும் சிறப்பாக விளையாட வைத்தது. ரிக்கி பாண்டிங்குக்கு மிக்க நன்றி. என்னுடைய நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் ரிக்கி பாண்டிங் பேசியது கண்ணீரை வரவழைத்ததாகக் கூறினார்கள். எனக்குப் புல்லரித்து விட்டது. கிரிக்கெட்டின் மகத்தான வீரர் ஜிம்பாப்வே கிரிக்கெட் பற்றியும் என்னைப் பற்றியும் பேசியிருக்கிறார். எனக்குக் கூடுதலான ஊக்கம் தேவையில்லை. ஆனால் தேவைப்பட்டால் அது அந்தக் காணொளி தான். என்றார். 

சிகந்தர் ராஸா பற்றி ரிக்கி பாண்டிங் பேசிய காணொளியை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பகிர்ந்திருந்தது. இந்த வருடம் இதுவரை ஏழு ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார் ராஸா. அவருடைய திறமை பற்றி  ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

தனது அணிக்காக எப்படிப் பங்களிக்க வேண்டும் என்பதை அறிந்துள்ளார் ராஸா. காரியத்தைக் கச்சிதமாக முடிக்கிறார். கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் எல்லோரும் அழுத்தம் தரக்கூடிய தருணங்களில் திறமையை நிரூபிக்க எண்ணுவார்கள். வார்ன், மெக்ராத் சிறந்த உதாரணங்கள். மிகப்பெரிய தருணங்களை, மேடைகளை விரும்புவார்கள். கிடைத்தால் அந்த வாய்ப்பை நழுவ விட மாட்டார்கள். வெற்றி கிடைக்கும் வரை போராடுவார்கள். தற்போது அதைத்தான் செய்து வருகிறார் ராஸா. 33, 34 வயதில் திறமையை மேம்படுத்துவது கடினம். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டாக இருந்தாலும் டி20யாக இருந்தாலும் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிகளை ராஸா அறிந்துள்ளார். 36 வயதானாலும் இளமைத் துடிப்புடன் விளையாடுகிறார். அவர் மீண்டும் 26 வயதுக்குத் திரும்பி விட்டது போல உள்ளது. மைதானத்தில் ஓடுகிறார், சந்தோஷமாக விளையாடுகிறார் என்றார்.  

36 வயது ராஸா, ஜிம்பாப்வே அணிக்காக 17 டெஸ்டுகள், 123 ஒருநாள், 63 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com