இப்போதாவது தெ.ஆ. கேப்டன் வெளியேற்றப்படுவாரா?

தென்னாப்பிரிக்காவுக்குப் பெரிய சிக்கலாக இருப்பவர், கேப்டன் பவுமா.
இப்போதாவது தெ.ஆ. கேப்டன் வெளியேற்றப்படுவாரா?

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்தியாவை வீழ்த்தி 5 புள்ளிகளுடன் குரூப் 2 பிரிவில் முதலிடம் வகிக்கிறது. நெதர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விடும். 

ஆனால் தென்னாப்பிரிக்காவுக்குப் பெரிய சிக்கலாக இருப்பவர், கேப்டன் பவுமா.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் 0,0,3 என மோசமாக விளையாடி விமர்சனங்களுக்கு ஆளானார் தெ.ஆ. கேப்டன் பவுமா. ஜனவரியில் தென்னாப்பிரிக்காவில் தொடங்கும் டி20 லீகில் எந்த அணியும் பவுமாவைத் தேர்வு செய்யவில்லை. இதனால் நெருக்கடிக்கு ஆளானார். எனினும் டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை வழி நடத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் பவுமாவின் மோசமான பேட்டிங் தொடர்கிறது. இதுவரை விளையாடியதில் 2*, 2, 10 எனத் தொடர்ந்து குறைந்த ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு நெருக்கடி தந்து வருகிறார். 

கடந்த ஆறு டி20 இன்னிங்களிலும் 10 ரன்களுக்கு மேல் அவர் எடுக்கவில்லை. மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

பவுமா அணியில் இருப்பதால் வாய்ப்பில்லாமல் வெளியே இருப்பவர், 33 வயது ரீஸா ஹெண்ட்ரிக்ஸ். கடந்த ஆறு இன்னிங்ஸ்களில் அவர் எடுத்த ரன்கள்: 

(சமீபத்தில் இருந்து) 42, 74, 70, 53, 57, 23.

ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய 3 ஆட்டங்களிலும் அரை சதம் எடுத்து அசத்தினார் ரீஸா. ஆனால் ஆகஸ்ட் 5-க்குப் பிறகு அவருக்குச் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இதனால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் துணிச்சலான முடிவெடுத்து பவுமா அணியிலிருந்து நீக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. சிறப்பாக விளையாடி வரும் ரீஸாவை இனிமேலும் வெளியே உட்கார வைக்கக் கூடாது என்றும் ரசிகர்களும் நிபுணர்களும் கூறுகிறார்கள். இதனால் ஒவ்வொரு ஆட்டத்திலும் சரியாக விளையாட காரணத்தால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார் பவுமா. நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு, என்னைத் தவிர அணியில் உள்ள எல்லா பேட்டர்களும் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்றார். இதற்கான தீர்வு என்ன என்பது இன்னும் தெரியவில்லை. 

31 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள பவுமா 1 அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 113.97. இந்த வருடம் இன்னும் மோசமாக விளையாடி வருகிறார். 10 ஆட்டங்களில் மூன்று முறை மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்துள்ளார். 

அணியின் நலனுக்காக தென்னாப்பிரிக்க அணியில் கட்டாயமாக மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com