
ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி மோசமாக விளையாடி வருவதற்கு இந்திய ரசிகர்கள் கோபமடைந்து, ஐபிஎல் போட்டியைப் புறக்கணிப்போம் எனச் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதி வருகிறார்கள்.
இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 72 ரன்கள் எடுத்தார். மதுஷங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு பேட்டிங் செய்த இலங்கை அணி, 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பதும் நிசங்கா 52 ரன்களும் குசால் மெண்டிஸ் 57 ரன்களும் எடுத்து வலுவான தொடக்கத்தை அளித்தார்கள். சஹால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2 விக்கெட்டுகளும் ஆட்டமிழக்காமல் 33 ரன்களும் எடுத்த இலங்கை கேப்டன் தசுன் ஷனகா ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் வீழ்த்தி விட்டால் இந்திய அணி ஆசியக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேறிவிடும். இறுதிச்சுற்றில் விளையாட வாய்ப்பு கிடைக்காது. இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் விளையாடிய விதம், அணித்தேர்வு எனப் பல விஷயங்களில் இந்திய அணி மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.
உம்ரான் மாலிக் எங்கே (150 கி.மீ. வேகம்), ஏன் தீபக் சஹார் அங்கு இல்லை (உயர் தரமான ஸ்விங் பந்துவீச்சாளர்), இவர்கள் வாய்ப்பு கிடைப்பதற்கான தகுதியைக் கொண்டவர்கள் இல்லையா, சொல்லுங்கள்! தினேஷ் கார்த்திக் ஏன் தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெறுவதில்லை? ஏமாற்றம் என்று பிரபல வீரர் ஹர்பஜன் சிங்கும் இந்திய அணி மீதான தனது அதிருப்தியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போன்ற முக்கியமான போட்டிகளில் இந்திய அணி மோசமாக விளையாடுவதற்குக் காரணம் ஐபிஎல் போட்டி தான், இந்திய வீரர்களின் கவனம் ஐபிஎல் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சம்பளத்தின் மீதுதான் உள்ளது, நாட்டுக்காக அவர்கள் முனைப்புடன் விளையாடுவதில்லை. இதனால் ஐபிஎல் போட்டியைப் புறக்கணிப்போம் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுடைய கோபங்களைச் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். இதனால் BoycottIPL என்கிற ஹாஷ்டேக் ட்விட்டரில் அதிகக் கவனம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.