டைமண்ட் லீக்: வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
டைமண்ட் லீக்: வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீ. தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் 88.13 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 2-வது இந்தியர் நீரஜ் சோப்ரா. 2003-ல் பாரிஸில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்றார். பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் நீரஜ் சோப்ரா காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை. 

கடந்த மாத இறுதியில் ஸ்விட்சர்லாந்தின் லுசானேவில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் பங்கேற்றார் நீரஜ் சோப்ரா. இந்தப் போட்டியில் 89.08 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பெற்றார். இந்தப் போட்டியின் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடித்த வீரர்கள், ஜூரிச்சில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் பங்கேற்றார்கள். டைமண்ட் லீக் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றதுடன் 2023-ல் ஹங்கேரியில் நடைபெறவுள்ள உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதியடைந்தார் நீரஜ் சோப்ரா. 

இந்நிலையில் ஜூரிச்சில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் 88.44 மீ தூரத்துக்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பெற்றார். டைமண்ட் லீக் போட்டியில் முதல்முறையாக சாம்பியன் ஆகியுள்ளார் 24 வயது நீரஜ் சோப்ரா. 2017-ல் 7-வது இடமும் 2018-ல் 4-வது இடமும் பெற்றார். முதலிடம் பெற்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ. 23.85 லட்சம் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆண்டர்சன் பீட்டர்ஸ் காயம் காரணமாக இப்போட்டியில் கலந்துகொள்ளவில்லை. 

டைமண்ட் லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக்ஸ், உலக சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகளுக்கு அடுத்ததாகப் பெரிய போட்டியாக டைமண்ட் லீக் கருதப்படுகிறது. கடந்த 13 மாதங்களில் ஒலிம்பிக்ஸில் தங்கம், உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி, டைமண்ட் லீக் சாம்பியன் என மூன்று சாதனைகளை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com