நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக மீண்டும் சதமடித்த ரஜத் படிதார்

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இரு சதங்களை அடித்துள்ளார் 29 வயது ரஜத் படிதார்.
ரஜத் படிதார் (கோப்புப் படம்)
ரஜத் படிதார் (கோப்புப் படம்)


நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக ரஜத் படிதார் மீண்டும் சதமடித்துள்ளார்.

நியூசிலாந்து ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடுகிறது. பெங்களூரில் நடைபெற்ற முதல் இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்களும் டிரா ஆனது. 3-வது ஆட்டம் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய ஏ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய ஏ அணி 86.4 ஓவர்களில் 293 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள ருதுராஜ் கெயிக்வாட், அபாரமாக விளையாடி சதமடித்தார். 127 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். உபேந்திர யாதவ் 76 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து ஏ அணியின் மேத்யூ ஃபிஷர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்ஸில் 71.2 ஓவர்களில் 237 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மார்க் சாப்மேன் 92 ரன்கள் எடுத்தார். செளரப் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் இந்திய ஏ அணி 2-வது இன்னிங்ஸில் 85 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. முதல் ஆட்டத்தில் சதமடித்த ரஜத் படிதார், இந்த ஆட்டத்திலும் அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 109 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் 94 ரன்கள் எடுத்தார். 

ஐபிஎல் 2022 போட்டியில் ஆர்சிபி அணி. லக்னெளவுக்கு எதிரான பிளேஆஃப் ஆட்டத்தில் ரஜத் படிதார் அடித்த சதத்தால் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. 49 பந்துகளில் சதமடித்த படிதார், 54 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியில் இடம்பெறாத உள்ளூர் வீரர்களில் ஐபிஎல் பிளேஆஃப் போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்.  இதன்பிறகு ரஞ்சி கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் சதமடித்து மத்தியப் பிரதேச அணி கோப்பையை வெல்ல உதவினார். தற்போது நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இரு சதங்களை அடித்துள்ளார் 29 வயது ரஜத் படிதார்.

3-வது ஆட்டத்தில் வெற்றி பெற நியூசிலாந்து ஏ அணிக்கு 416 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 3-ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com