இந்திய ஏ அணி: புறக்கணிக்கப்பட்ட தமிழக வீரர்கள்!

இந்திய ஏ அணிகளில் தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து பிசிசிஐயின் கவனத்துக்கு...
ஷாருக் கான் - பாபா இந்திரஜித் - சாய் கிஷோர்
ஷாருக் கான் - பாபா இந்திரஜித் - சாய் கிஷோர்

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக விளையாடும் இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான அணியில் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 

நியூசிலாந்து அணி ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடுகிறது. லிஸ்ட் ஏ ஆட்டங்களுக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 22, 25, 27 தேதிகளில் லிஸ்ட் ஏ ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சஞ்சு சாம்சன் தலைமையிலான அணியில் பிருத்வி ஷா, ருதுராஜ் கெயிக்வாட், ராகுல் திரிபாதி போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள். எனினும் இரு முக்கியமான தமிழக வீரர்களுக்கு இந்திய ஏ அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை. 

இதையும் படிக்ககோலி முன்பு திறமையை நிரூபித்த தமிழக வீரர் சாய் கிஷோர்

உள்ளூர் ஆட்டங்களில் திறமையை நிரூபித்து இந்தியாவின் நெ.1 சுழற்பந்து வீச்சாளராக உள்ளவர், சாய் கிஷோர். ஐபிஎல் 2022 போட்டியில் குஜராத் அணி பட்டம் வெல்வதற்கு சாய் கிஷோரின் பங்களிப்பும் உள்ளது. ஐபிஎல் 2022 போட்டியில் சரியாக விளையாடவில்லையென்றாலும் கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடுபவர் என்கிற பெயரைப் பெற்றவர் ஷாருக் கான். கடந்த ஜனவரி மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு ஷாருக் கான், சாய் கிஷோர் ஆகிய இருவரும் தேர்வானார்கள். எனினும் அப்போது இந்திய அணியின் 11 பேரில் ஒருவராக இடம்பெற இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இந்நிலையில் இந்திய ஏ அணியில் ஷாருக் கான், சாய் கிஷோர் ஆகிய இருவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரையுமே தேர்வுக்குழு சீந்தவில்லை. இந்திய அணி வரை தேர்வான வீரர்களை இந்திய ஏ அணிக்குக் கூட தேர்வு செய்யாததை எப்படிப் புரிந்துகொள்வது? இந்திய ஏ அணிக்குத் தேர்வு செய்து திறமையை நிரூபிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டால் தானே ஒரு வீரரால் அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற முடியும்?

இதையும் படிக்க: உலகளவில் அதிக சராசரி கொண்டுள்ள இந்திய வீரர்: பாபா இந்திரஜித் சாதனை

அதேபோல 3 நான்கு நாள் ஆட்டங்களுக்குத் தேர்வான இந்திய ஏ அணியிலும் தமிழக வீரர் யாரும் தேர்வாகவில்லை. 

ரஞ்சி கோப்பைப் போட்டியில் தமிழக அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போனாலும் தமிழக வீரர் பாபா இந்திரஜித் அபாரமாக விளையாடினார். விளையாடிய 3 ஆட்டங்களிலும் சதங்கள் அடித்தார். கூடுதலாக ஒரு அரை சதமும். 3 ஆட்டங்களில் 396 ரன்கள் எடுத்தார். சராசரி - 99.00. எனினும் இந்திய ஏ அணியில் பாபா இந்திரஜித்துக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இதையும் படிக்க: ஐபிஎல் போட்டியில் ஏமாற்றமளித்த தமிழக வீரர் ஷாருக் கான்

ரஞ்சி கோப்பைப் போட்டி, உள்ளூர் வெள்ளைப் பந்துப் போட்டிகள், ஐபிஎல் என பலவற்றிலும் திறமையை நிரூபித்தாலும் தமிழக வீரர்களுக்கு இந்திய ஏ அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனது உண்மையிலேயே துரதிர்ஷ்டம் என்றுதான் எண்ண வேண்டும். இந்த நிலை அவர்களைத் துவள செய்து விடக்கூடாது. தொடர்ந்து நன்கு விளையாடி வாய்ப்பு பெற அவர்கள் முயல வேண்டும். அதேசமயம், இந்திய ஏ அணிகளில் தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து பிசிசிஐயின் கவனத்துக்குத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கொண்டு செல்ல வேண்டும். 

இந்திய ஏ அணி

சஞ்சு சாம்சன் (கேப்டன்), பிருத்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெயிக்வாட், ராகுல் திரிபாதி, ரஜத் படிதார், கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், ஷாபாஸ் அஹமது, ராகுல் சஹார், திலக் வர்மா, குல்தீப் சென், ஷர்துல் தாக்குர், உம்ரான் மாலிக், நவ்தீப் சைனி, ராஜ் பவா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com