டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

இருவரும் தங்களுடைய உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக பிரதான சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிச்சுற்றை 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை அணி 6-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசியக் கோப்பையை வென்றுள்ள இலங்கை அணி, டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறவில்லை. தகுதிச்சுற்றில் விளையாடி அதில் தேர்ச்சி பெற்ற பிறகுதான் பிரதான சுற்றில் இடம்பெற முடியும்.  2014-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணி 2021 நவம்பர் 15 அன்று தரவரிசையின் அடிப்படையில் 9-வது இடத்திலும் இருந்தது. முதல் 8 இடங்களில் இல்லாத காரணத்தால் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அணிகள் தகுதிச்சுற்றில் விளையாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் 21 வரை நடைபெறும் முதல் சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 8 அணிகள் போட்டியிடவுள்ளன. இந்த 8 அணிகளில் இருந்து 4 அணிகள் பிரதான சுற்றுக்குத் தேர்வாகும். அக்டோபர் 16 அன்று நமீபியாவுக்கு எதிராகத் தனது முதல் ஆட்டத்தை இலங்கை அணி விளையாடவுள்ளது. 

காயம் காரணமாக ஆசியக் கோப்பைப் போட்டியில் விளையாடாத துஷ்மந்த் சமீரா, லஹிரு குமாரா ஆகிய இருவரும் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார்கள். இருவரும் தங்களுடைய உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இலங்கை அணி

தசுன் ஷனகா (கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, பதும் நிசங்கா, குசால் மெண்டிஸ், சரித் அசலங்கா, பனுகா ராஜபக்ச, தனஞ்ஜெய டி சில்வா, ஹசரங்கா, மஹீஷ் தீக்‌ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சே, சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, லஹிரு குமாரா, தில்ஷன் மதுஷங்கா, பிரமோத் மதுஷன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com