சொதப்பும் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்: டி20 தொடர் இழப்பை தவிர்க்குமா?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இழக்காமலிருக்க இந்திய அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 
சொதப்பும் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்: டி20 தொடர் இழப்பை தவிர்க்குமா?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இழக்காமலிருக்க இந்திய அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் , டி20 தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான 5  போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடரில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று மேற்கிந்தியத் தீவுகள் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

நடந்து முடிந்த இரண்டு டி20 போட்டிகளிலுமே இந்திய அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. அணியின் தோல்விக்கு முன்வரிசை ஆட்டக்காரர்களின் சொதப்பலான பேட்டிங்கும் காரணாமாக பார்க்கப்படுகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் முன்வரிசை ஆட்டக்காரர்களான இஷான் கிஷன் (6 ரன்கள்), ஷுப்மன் கில் (3 ரன்கள்) மற்றும் சூர்யகுமார் யாதவ் (21 ரன்கள்) மொத்தமாக 30 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இரண்டாவது டி20 போட்டியிலும் இதே நிலையே தொடர்ந்தது. 2-வது போட்டியில் முன்வரிசை ஆட்டக்காரர்களான இஷான் கிஷன் (27 ரன்கள்), ஷுப்மன் கில் (7 ரன்கள்) மற்றும் சூர்யகுமார் யாதவ் (1 ரன்) மொத்தமாக 35 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றது. தொடரிலும் முன்னிலையில் உள்ளது. 

டி20 போட்டிகளில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இதனை, இந்திய அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்களான இஷான்  கிஷன், ஷுப்மன் கில் மற்றும் சூர்யகுமார் யாதவினால் கடந்த இரண்டு போட்டிகளாக செய்ய முடியவில்லை. முன்வரிசை ஆட்டக்காரர்கள் சீக்கிரம் ஆட்டமிழப்பதால் மத்தியில் களமிறங்கும் வீரர்களுக்கு அழுத்தம் அதிகமாகிறது. அதனால் அவர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறுகின்றனர். 

ஏற்கனவே, இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று டி20 தொடரில்  மேற்கிந்தியத் தீவுகள் முன்னிலை வகிக்கும் நிலையில் நாளை (ஆகஸ்ட் 8) 3-வது டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும், தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணியும் களமிறங்க உள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப்  பிறகு இந்திய அணி இருதரப்பு தொடரில் மேற்கிந்தியத் தீவுகளிடம் எந்த ஒரு தொடரையும் இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com