பாகிஸ்தான் அணியைத் தேர்வு செய்யும் அணி தேர்வுக்குழு தலைவராக மீண்டும் இன்ஸமாம் உல் ஹக்கை நியமித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
53 வயதாகும் இன்ஸமாம் உல் ஹக் பாகிஸ்தான் அணியை தேர்வு செய்யும் தேர்வுக் குழுத் தலைவராக கடந்த 2016 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் செயல்பட்டுள்ளார். தற்போது அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் மீண்டும் அணி தேர்வுக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக இன்ஸமாம் உல் ஹக் 120 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,830 ரன்கள் குவித்துள்ளார். அதில் 25 சதங்கள் மற்றும் 46 அரைசதங்கள் அடங்கும். 378 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 11,739 ரன்கள் குவித்துள்ளார். அதில் 10 சதங்கள் மற்றும் 83 அரைசதங்கள் அடங்கும். பாகிஸ்தான் அணிக்காக ஒரு டி20 போட்டியில் அவர் விளையாடியுள்ளார்.
பாகிஸ்தான் அணி தேர்வுக் குழுத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இன்ஸ்மாமுக்கு முக்கியமான வேலைகள் உள்ளன. குறிப்பாக, இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியை தேர்வு செய்யும் முக்கிய பொறுப்பு அவருக்கு உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியை தேர்வு செய்தவரும் இவரே. இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணியைத் தேர்வு செய்யும் பொறுப்பும் அவரிடமே தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியை தேர்வு செய்யும் பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்தியா முழுவதும் என் வீடுதான்: ராகுல் காந்தி
இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் என அண்மையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.