உலகக் கோப்பையில் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு பேசப்படவில்லை; கம்பீர் கிளப்பிய அடுத்தப் புயல்!

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதற்கு முக்கியப் பங்காற்றிய யுவராஜ் சிங்குக்கு உரிய பாராட்டுகள் கிடைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு பேசப்படவில்லை; கம்பீர் கிளப்பிய அடுத்தப் புயல்!
Updated on
2 min read

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதற்கு முக்கியப் பங்காற்றிய யுவராஜ் சிங்குக்கு உரிய பாராட்டுகள் கிடைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தது. அந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் 362 ரன்கள் குவித்தார். அதேபோல 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதற்கு முக்கியப் பங்காற்றிய யுவராஜ் சிங்குக்கு உரிய பாராட்டுகள் கிடைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின்போது தொடர் நாயகன் விருதினை யுவராஜ் சிங் வென்றது உங்களுக்குத் தெரியும். இது குறித்து எத்தனை பேர் பேசினார்கள். யுவராஜ் சிங் குறித்து பேசாததற்கு காரணம் என்ன? அவரை விளம்பரப்படுத்திக் கொள்ள தனியாக மக்கள் தொடர்புக் குழுவினர் என தனியாக ஒன்று இல்லை என்பது காரணமாக இருக்கலாம். நீங்கள் ஒருவரைப் பற்றி அதிகம் பேசவில்லை என்றாலும், அவரை மக்களிடத்தில் அதிகம் கொண்டுசெல்லவில்லை  என்றாலும் அவர் அதிகமாக வெளியில் தெரிய மாட்டார். அவருக்கு கிடைக்கவேண்டிய உரிய பாராட்டுகளும் கிடைக்காது. ஒருவரை மட்டுமே தொடர்ந்து மக்கள் முன் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தால் அவர் ஒரு பிராண்டாக மாறி விடுகிறார்.

என்னிடம்  விளம்பரப்படுத்தும் நிறுவனம் இருந்து இருவரை அதில் காண்பிக்க வேண்டும் என வைத்துக் கொள்ளுங்கள். நான் அவர்கள் இருவரில் ஒருவரை 2 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு விளம்பரப்படுத்துகிறேன். மற்றொரு நபரை 10 நிமிடங்களுக்கு விளம்பரப்படுத்துகிறேன். அவர்கள் இருவரில் முதலில் உள்ள நபரே பிராண்டாக மாறுவார். ஏனென்றால், நான் இரண்டாவது நபரை அதிகம் விளம்பரப்படுத்தவில்லை. இந்த உலகக் கோப்பையில் ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. இந்திய அணி பேட்டிங்கை நம்பியுள்ள அணியாக இல்லாமல் பந்துவீச்சை மையப்படுத்திய அணியாக மாறியுள்ளது. முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரது கடின உழைப்பு பாராட்டுகளைப் பெற்றுள்ளது என்றார்.

அண்மையில், லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் போட்டியின்போது கௌதம் கம்பீர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங்குக்கு உரிய பாராட்டுகள் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com